ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்: மத்திய தொல்லியல் அதிகாரிகள் 2-ம் கட்ட ஆய்வு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைப்பது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் இரண்டாம் கட்டமாக இன்று ஆய்வு செய்தனர்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளை மத்திய தொல்லியல் துறை தொடங்கியுள்ளது.

ஆதிச்சநல்லூரியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் இம்மாதம் 11-ம் தேதி ஏற்கெனவே ஆதிச்சநல்லூரியில் முதல் கட்ட ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஆதிச்சநல்லூர் பகுதியில் 5 இடங்களை அவர்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான மத்திய தொல்லியல் துறை குழுவினர் இன்று 2-ம் கட்டமாக நேரில் ஆய்வு செய்தனர்.

ஏற்கெனவே பார்வையிட்ட 5 இடங்களையும் மீண்டும் ஆய்வு செய்த குழுவினர், கடந்த 2004-ம் ஆண்டு அகழாய்வு நடைபெற்ற இடம் மற்றும் ஆதிச்சநல்லூரில் பாறைக் கிண்ணங்கள் உள்ள இடங்களை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 114 ஏக்கர் பகுதியில் டிரோன் கேமிரா மூலம் ஆய்வு செய்தனர். அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆதிச்சநல்லூரில் தொல்லியல் பகுதியை சுற்றி வேலி அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. அந்தப் பணி முழுவதும் முடிவடையவில்லை. இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் மத்திய தொல்லியல் துறை குழுவினரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதையடுத்து அந்த இடத்தையும் மண்டல இயக்குநர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலி அமைக்கும் பணியை சிறிய மாறுதல்களுடன் தொடர்ந்து மேற்கொண்டு விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், அலுவலர் அறவாழி, பராமரிப்பு அலுவலர்கள் சங்கர், பாலகிருஷ்ணன், வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மூன்று பகுதிகளில் அகழாய்வு:

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் இந்த ஆண்டு அகழாய்வு நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு மாவட்டத்தில் மூன்று இடங்களில் மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கொற்கை அருகே உள்ள அகரம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம் ஆகிய இடங்களிலும், ஆதிச்சநல்லூர் பகுதியில் கால்வாய் மற்றும் புளியங்குளம் பகுதியிலும், சிவகளை பகுதியில் சிவகளை செக்கடி, ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம், பேரூர் திரடு, வெள்ளி திரடு, பரக்கிராமபாண்டி, பொட்டல் கோட்டை திரடு, ஆவரங்காடு ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தாமிரபரணி ஆற்று படுகையில் அகழாய்வு செய்ய வேண்டிய தொல்லியல் இடங்களை ஆய்வு செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

விளையாட்டு

24 mins ago

இணைப்பிதழ்கள்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்