புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே அம்பேத்கர் சிலை அவமதிப்பு; 4 பேர் கைது

By அ.முன்னடியான்

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம் கிராமம் உள்ளது. இங்குள்ள சந்திப்பில் அம்பேத்கரின் மார்பளவு சிலை இருக்கிறது. இந்தச் சிலை மீது நேற்று (டிச.19) இரவு மர்ம நபர்கள் சிலர் சாணியை வீசி அவமரியாதை செய்துள்ளனர். இன்று (டிச.20) காலை அப்பகுதி மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து, சுற்றுப்புற கிராமத்துக்கும் தகவல் பரவியது. இதையடுத்து, சூரமங்கலம் சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். பின்பு, அவமதிப்பு செய்யப்பட்ட அம்பேத்கர் சிலையைத் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்த மர்ம நபர்களைக் கைது செய்யக் கோரி, சூரமங்கலம் சந்திப்பில் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் சிலை அவமதிப்பைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த எஸ்.பி.ரங்கநாதன், நெட்டப்பாக்கம் ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்வதாகக் காவல் துறையினர் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக, அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, விசாரணையில் இறங்கிய நெட்டப்பாக்கம் காவல் துறையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, மடுகரையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் மதுபோதையில் அம்பேத்கர் சிலை மீது சாணியை வீசியது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மடுகரை மெயின்ரோட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் (22), முத்துக்குமரன் (21), ரவிக்குமார் (21), ரமேஷ் (21) ஆகியோரைக் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருந்த 4 பேரும் அம்பேத்கர் சிலையை அவமரியாதை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களைக் கரோனா பரிசோதனைக்காக காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆய்வக முடிவு வந்த பின்னர் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்