டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டிச.4-ல் தொடர் மறியல்: இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டிசம்பர் 4-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சிபிஐ (எம்.எல்) என்.கே.நடராஜன் ஆகியோர் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இவர்கள் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மத்திய பாஜக அரசு கரோனா தொற்றுப் பரவல் காலத்தைப் பயன்படுத்தி அவசரக் கோலத்தில் ஜனநாயக விரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமல் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

வரலாற்றில் இல்லாத அளவு லட்சக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து சென்று டெல்லியில் முகாமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்திருத்த முன்வடிவையும் திரும்பப் பெறக் கோரி நடைபெறும் நியாயமான எழுச்சிமிக்க போராட்டத்தினை இடதுசாரிக் கட்சிகள் ஆதரிப்பதோடு அவர்களோடு இணைந்து களத்தில் நின்று போராடி வருகின்றன.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துத் தீர்வு காண்பதற்கு மாறாக, மோடி அரசு விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. டெல்லி நகரத்திற்குள் நுழையவிடாமல் பாஜக அரசின் காவல்துறையும், துணை ராணுவப்படையும் தொடுக்கும் தாக்குதல்களையும், தடைகளையும் எதிர்கொண்டு விவசாயிகள் டெல்லியைச் சுற்றி முகாமிட்டுப் போராடி வருகின்றனர்.

விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் சிதைக்கும் வகையிலும், விவசாய உற்பத்தி பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் வகையிலும், விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கி பெருமுதலாளிகளிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிறு-குறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தினை இழக்க வழிவகுக்கும் வகையிலும், கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களையும், மின்சாரத்தையும், மின்விநியோகத்தையும் தனியார் கொள்ளை லாபத்திற்கு அனுமதிக்கும் மின்சாரத் திருத்தச் சட்ட முன்வடிவினையும் மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.

மோடி அரசு நிறைவேற்றியுள்ள இச்சட்டங்களை, விவசாயம் மாநிலப் பட்டியலில் உள்ள ஒன்று என்பதைப் பற்றிக்கூடக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஆதரித்துள்ளது மட்டுமின்றி, உடனடியாக தமிழகச் சட்டப்பேரவையிலும் நிறைவேற்றி தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மாபெரும் துரோகத்தினை இழைத்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் பேரெழுச்சி மிக்க போராட்டத்திற்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் வகையிலும், போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை ஏற்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் மாவட்ட, வட்ட, ஒன்றியத் தலைநகரங்களில் 2020 டிசம்பர் 4-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மறியல் போராட்டம் நடத்துவது என சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்-எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இவ்வியக்கத்தில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், உழைப்பாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் பெருந்திரளாகப் பங்கேற்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கோரிக்கைகளை எழுப்பிட வேண்டுமென இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’’.

இவ்வாறு அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

கருத்துப் பேழை

9 mins ago

சுற்றுலா

46 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்