அறிவுப்பூர்வமாக புயலை கையாள்வதில் இந்தியாவுக்கே முதல்வர் பழனிசாமி பாடம் கற்றுத்தந்திருக்கிறார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

By செய்திப்பிரிவு

அறிவுப்பூர்வமாக புயலை கையாள்வதில் இந்தியாவுக்கே முதல்வர் பழனிசாமி பாடம் கற்றுத்தந்திருக்கிறார் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (நவ. 26) அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"36 வருவாய் மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் ஏறத்தாழ 5,000 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. 3,085 முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டு, உணவு, குழந்தைகளுக்குப் பால் பவுடர், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

இத்தகைய வலுவான புயலில் உயிர்ச்சேதம் ஏற்படாமல் வரலாற்று சாதனையை முதல்வர் படைத்திருக்கிறார். அவருடைய தூய உள்ளம் இன்றைக்கு ஒரு இலக்கணத்தைப் படைத்திருக்கிறது. 100% மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். 100% மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

சாலையில் நடந்து வருபவர் மீது மரம் விழும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இதனை தவிர்க்கத்தான் மக்கள் வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. திருவள்ளூரில் மண் சுவர் இடிந்து விழுந்து சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரு நிகழ்வுகளைத் தவிர வேறு எந்த சேதாரங்களும் இல்லை.

அறிவுப்பூர்வமாக புயலை கையாள்வதில் இந்தியாவுக்கே முதல்வர் பாடம் கற்றுத்தந்திருக்கிறார். தற்போது, குடிசை வீடுகள் 89, ஓட்டு வீடுகள் 12, மொத்தம் 101 வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் ஆடு-மாடுகள் 26, சேதமடைந்த 380 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. ஒருமணிநேரத்தில் மரங்கள் அகற்றப்பட்டு தமிழக அரசு சாதனை படைத்திருக்கிறது. ராட்சத இயந்திரங்கள் மூலம், சாலையில் தேங்கியுள்ள நீர் மற்றும் வீடுகளுக்குள் புகுந்துள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புனிதப் பணி. 145 கி.மீ. வேகத்தில் காற்று சுழன்றாடியது. புயலை வழியனுப்பிய விதத்தை எல்லோரும் பாராட்டுகின்றனர். கஜா, ஓகி போன்ற புயல்களிலிருந்து பெற்ற பாடங்களால் இதனை உயிரிழப்பின்றி கடந்திருக்கிறோம். அனைத்து நீர்நிலைகளும் இன்று நிரம்பியிருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இரவு முழுவதும் கண்விழித்து முதல்வர் மக்களை பாதுகாத்துள்ளார்.

சேதாரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார். வலுவிழந்துள்ள இந்த புயலை கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சென்னையில் அநேக இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க விரும்பவில்லை. ஆனால், தேங்கிய நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் முன்பகுதி கரையை கடந்தபோதே அதிதீவிர புயலாக இருந்தது, தீவிர புயலாக வலுவிழந்தது. அதனால், மிகப்பெரிய பாதுகாப்பு கிடைத்தது. முதல்வரின் பிரார்த்தனைதான் காரணம் என்பது எங்களின் நம்பிக்கை. உரிய நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஆய்வு மேற்கொள்வதைப் பார்த்துவிட்டு, தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடி, பின்னர் கிடைக்காமல் வெறும் தரையில் நடந்து பார்வையிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் சோகமாக நடந்துகொண்டே போகிறார். எப்படி ஆய்வு என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் இயக்கத்தைப் பார்த்தும், முதல்வரின் சுறுசுறுப்பைப் பார்த்துதான் அவர் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

மக்கள் அச்சம்கொண்டிருந்த வேளையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு முதல்வர் நேரடியாக சென்றது புதிய வரலாறு. 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்காமல், ஜெயலலிதா தவிர்த்து வேறு யாராவது முதல்வராக இருந்திருந்தால், ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தமிழ்நாடு இந்திய வரைபடத்திலிருந்தே காணாமல் போயிருக்கும்.

புயலால் பயிர்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், நிவாரண விதிகளுக்கு உட்பட்டு, காப்பீடு, இழப்பீடு வழங்குவதற்கான உரிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். அவரது அறிவிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார்நிலையில் இருக்கின்றது. முழுமையாகவும் பகுதியாகவும் வீடுகள் பாதிக்கப்பட்டோர், பயிர்ச்சேதம் அடைந்தோர் யாரும் அச்சப்பட, கவலைப்படத் தேவையில்லை".

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

வலைஞர் பக்கம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

52 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்