நிவர் கரையைக் கடக்கும்போது அதிதீவிரப் புயலாக மாறும்; 120 முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

நிவர் புயல் தீவிரப் புயலாக மாறும். அது நாளை மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும்போது அதி தீவிரப் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையைக் கடக்கும்போது 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நிவர் புயல் தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது அது மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது.

இது அடுத்து வரும் 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக (severe cyclonic storm), (very severe cyclonic storm) வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும்.

கரையைக் கடக்கும் சமயத்தில் பலத்த காற்றானது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், சமயத்தில் 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் புயல் வலுப்பெற இருக்கின்ற காரணத்தால் நாளை கரையைக் கடக்கும் மாவட்டங்களில், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 145 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தற்போது புயலின் நிலை மாறியுள்ளது. ஆனால், கரையைக் கடக்கும் திசை மாறவில்லை. மற்றபடி தீவிரப் புயலாக மாறும் என்று சொல்லியிருந்தோம். தற்போது அதி தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளது.

புயல் தீவிரப் புயலாக இருந்தது. தற்போது அதி தீவிரப் புயலாக 3-வது நிலை நோக்கி மாறத் தொடங்கியுள்ளது. கஜா புயல் 140 கி.மீ. வேகமாக இருந்தது. இது அதைவிட வேகம் குறைவாக இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடல் நிலையைப் பொறுத்தவரை நாளை இரவு வரை தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் இயல்பை விட 2 மீட்டர் உயரத்துக்கு எழும்பக்கூடும். ஆகவே, மீனவர்கள் நாளைவரை கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை மழை தொடரும். அடுத்து வரும் 2 தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

நேற்றிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்வு 25 கி.மீ. வேகமாக இருந்தது. அதன் பின்னர் மாலைவரை மணிக்கு 11 கி.மீ. வேகத்திலும், அதன் பின்னர் 14 கி.மீ. வேகத்திலும், இரவு 4 கி.மீ. வேகத்திலும் நகர்ந்திருந்தது. தற்போது புயலின் நகர்வு நிலையாக உள்ளது. ஒவ்வொரு புயலும் வலுப்பெறும்போது அது நிலப்பகுதியுடன் தொடர்புகொள்ளும்போது அதன் நகர்வு குறைவாக இருக்கும்.

அது தீவிரப் புயலாக மாறும்போது வேகம்பெற்று நகரும். புயலின் நகரும் வேகத்துக்கும் திசை மாறுவதற்கும் சம்பந்தமில்லை. எந்தப் புயலும் ஒரே சீரான வேகத்துடன் நகராது. தற்போதைய கணிப்பைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கு அருகே நாளை மாலை புயல் கரையைக் கடக்கும்''.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்