இன்று உலக சர்க்கரை நோய் தினம்: இன்சுலின் சுரப்பு இல்லாதவர்களும் இயல்பான வாழ்க்கை வாழலாம்

By செய்திப்பிரிவு

உலக சர்க்கரை நோய் தினத்தை (நவ.14) முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையின் சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் வெங்கோஜெயபிரசாத் கூறியதாவது: இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தியாகும் ஒருவகை ஹார்மோன் ஆகும். நாம் எதைச் சாப்பிட்டாலும், சாப்பாட்டில் இருக்கும் சர்க்கரை ரத்தத்தில் கலந்துவிடும். ரத்தக்குழாய்கள் மூலம் இந்த சர்க்கரை அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. காற்று, தண்ணீர், சர்க்கரை ஆகிய மூன்றும் எரிந்து, அதில் கிடைக்கும் ஆற்றல்மூலம்தான் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் வேலைசெய்கிறது. ரத்தக்குழாயில் இருந்து ஒவ்வொரு செல்லுக்கும் எவ்வளவு சர்க்கரை தேவைப்படுகிறது என்பதை இன்சுலின் முடிவுசெய்கிறது. இன்சுலின் சுரப்பு இல்லையெனில் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்காமல் செயல் இழந்துவிடும்.

ரத்தக் குழாயில் சர்க்கரை படிந்து அடைப்பு ஏற்படும். இதனால், ஒவ்வொரு உறுப்பாக செயல் இழக்கும். 1000 சர்க்கரை நோயாளிகள் இருந்தால், அதில் ஒருவர் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பார். முதல்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் இன்சுலின் சுரக்காது. அவர்கள் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும். அவ்வாறு இன்சுலின் தேவைப்படுவோர் தமிழகத்தில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றை மட்டும் அளித்தால், அவர்களுக்கு தேவைப்படும் இன்சுலினை வழங்கி வருகிறோம்.

இயல்பாக வாழும் 80 வயது முதியவர்

பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலப்பிரச்சினைக்காக ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளும்போதுதான் அவர்களுக்கு முதல்வகை சர்க்கரை நோய் இருப்பது தெரியவருகிறது. இங்கு கண்டறிவதில் பிரச்சினை இல்லை. தொடர்ந்து சர்க்கரை அளவை சரியாக பராமரிப்பதிலும், தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதிலும்தான் பிரச்சினை இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு அளவுகளில் இன்சுலின் அளவு தேவைப்படும். அதற்கேற்றவாறு 3,4 முறை தினமும் இன்சுலின் போட வேண்டும். தினந்தோறும் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் இதைக் கடைப்பிடித்தால், மற்றவர்களைப் போல அவர்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். ஒருவரது வாழ்நாளில் எப்போது வேண்டுமானும் முதல்வகை சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படலாம். 8 மாத குழந்தைக்குகூட முதல்வகை சர்க்கரை நோய் வந்துள்ளது. எங்களிடம் 80 வயது முதியவர் ஒருவர் பல ஆண்டுகளாக இன்சுலின் பெற்று பயன்படுத்திவருகிறார். முதல்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் தங்களுக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என இன்சுலினை நிறுத்திவிட்டால், சில ஆண்டுகளில் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே, இன்சுலினை நிறுத்தக்கூடாது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

முதல்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உணவுகளையும் அளிக்கலாம்.ஆனால், பழங்கள் தவிர, நாக்கில் பட்டால் இனிப்பு சுவையுடைய சாக்லெட், பேக்கரி உணவுகள் போன்றவற்றை அளிக்கக்கூடாது. ஒவ்வொருவரின் ஜீரண சக்தியின் அளவும் வேறுபடும். எனவே, முதல்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் தங்கள் உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து 6 மாதம் முதல் ஓராண்டுவரை உணவுப் பட்டியலை பின்பற்றினால் மட்டுமே தங்களுக்கு ஏற்ற உணவுகள் எது என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கென தனி துறை செயல்பட்டுவருகிறது. இதற்கென 3 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு முதல்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேருக்கு மாதந்தோறும் இலவசமாக இன்சுலின் ஊசி போடப்படுவதோடு, அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ உரிய வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுவருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

இந்தியா

53 mins ago

ஓடிடி களம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்