தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு; மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு: முதல்வர் பழனிசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவெடுக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9-ம் கட்ட ஊரடங்கு அக். 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்டத் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து, இன்று (அக். 28) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலிக் காட்சி மூலமாக இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு, மருத்துவமனை படுக்கைகள், மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்துள்ளன. கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவிலிருந்து தமிழகம் விரைந்து மீண்டு வருகிறது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல் காப்பகங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், மேலும் காப்பகங்களை ஏற்படுத்த வேண்டும். மலைப்பாங்கான இடங்களில் மண்சரிவு ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும்.

11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என, திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை மற்றும் அதன்பிறகான மருத்துவ நிபுணர் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு இதுகுறித்து உரிய முடிவெடுக்கப்படும்.

தற்காலிக இடத்தில் செயல்படும் பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகளைத் திறப்பதற்கு தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. இதுகுறித்து ஆலோசித்து அரசு உரிய முடிவெடுக்கும்.

தீபாவளிப் பண்டிகை காலத்தில் தொற்று ஏற்படா வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்.

நோய்த்தொற்றுத் தடுப்பு விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் தமிழக அரசை விமர்சித்தன. ஆனால், தகுந்த நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, தமிழகத்தில் நோய்ப் பரவல் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்புப் பணியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அதனை எண்ணிப் பார்க்க வேண்டும். தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

3 mins ago

ஜோதிடம்

45 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்