புதுச்சேரியில் தளர்வுகள் அளித்தும் திறக்கப்படவில்லை: விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் திறப்பது எப்போது? - எதிர்பார்த்து காத்திருக்கும் விளையாட்டு வீரர்கள், வாசகர்கள்

By செ. ஞானபிரகாஷ்

மத்திய அரசு தளர்வுகள் அளித்தும் புதுச்சேரியில் விளையாட்டு மைதானங்களும், நூலகங்களும் திறக்கப்படவில்லை. இதனால் விளையாட்டு வீரர்களும், வாசகர்களும் தவிக்கின்றனர்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொது போக்குவரத்து, பள்ளிகள், நூலகங்கள், ஹோட்டல்கள், மதுக்கடைகள், மதுபார்கள், விடுதிகள், வர்த்தக,வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதன்பின்னர் மத்திய அரசு மே மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. 5-ம் கட்டமாக தற்போதுஊரடங்கு தளர்வுகளை மத்தியஅரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் வரும் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 6 மாதங்களுக்கு பிறகு மதுபார்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு தூய்மைபணிகள் நடக்கிறது. அதே நேரத்தில் நூலகங்கள், விளையாட்டு மைதானங்களையும் திறக்கஇன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ரகுபதி என்பவர் கூறுகையில், “தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி நூலகங்கள் திறக்கப்பட்டன. புதுச்சேரியில் நூலகங்களை திறக்கக்கோரி முதல்வரிடம் மனு அளித்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. நூலகம் திறக்காததால் இளையோர், வாசகர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய முடியாத சூழலில் பலரும் உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

அதேபோல், நாடு முழுவதும் விளையாட்டு மைதானங்களை திறக்க கடந்த 21-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் புதுச்சேரியில் இன்னும்விளையாட்டு அரங்குகள் திறக்கப்படவில்லை. இதற்கான உத்தரவு இன்னும் வழங்கப்படாததால் உப்பளத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கம், ராஜீவ் காந்தி மைதானம், லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் மற்றும் தனியார் விளையாட்டு மைதானங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. விரைவில் தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் நடைபெற இருப்பதால் அதற்கான பயிற்சி எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளையாட்டு வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், “தேசிய அளவில் பல்வேறு போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல மாநில வீரர்கள் பயிற்சி எடுக்க துவங்கியுள்ளனர். ஆனால் புதுச்சேரி மாணவர்கள் பயிற்சிஎடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார். ஸ்கேட்டிங் சங்க பொறுப்பாளர் பிரசாத் ராவ் கூறுகையில், “புதுச்சேரியில் இருந்து சென்ற 17 மாணவர்கள் தேசிய அளவில் ஸ்கேட்டிங் போட்டியில் விருதுகளை வென்றுள்ளனர்.

இவர்கள் சர்வதேச போட்டிக்கு செல்ல வேண்டும். ஆனால் ஊரடங்கால் அதற்கான பயிற்சியை பெற முடியவில்லை” என்று குறிப்பிட்டார். பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது, “கடந்த 6 மாதங்களாக பயிற்சி எடுக்க முடியவில்லை. அதனால் திறன் குறைவு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது” என்று கவலை தெரிவித்தனர்.

அரசு தரப்பில் ஆளுநர், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பையும் நாடினாலும் பலனில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்