அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது நாளை முடிவாகுமா?- இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தீவிர ஆலோசனை

By கி.கணேஷ்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் இணைந்து நாளை (அக்.7) அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவு மற்றும், இரு தரப்பினரின் தீவிர ஆலோசனைகளால் அதிமுக வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓபிஎஸ் தனியாக பிரிந்து சென்று, பின்னர் முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தார். அந்த இணைப்பின்போதே, அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டபோதும் அது வலியுறுத்தப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறுஆலோசனைக் கூட்டங்களிலும், ‘வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும்’ என்பதே ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், முதல்வர் பழனிசாமி தரப்பினர் இதை ஏற்கவில்லை.

அதேநேரம், கட்சியில் பல்வேறுநியமனங்கள், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களிலும், கட்சி ஒருங்கிணைப்பாளராகவே இருந்தாலும் ஓபிஎஸ் தரப்புக்கு உரிய அங்கீகாரம் இல்லாத நிலை காணப்பட்டது. ஓபிஎஸ் உடன் வந்த அவரது ஆதரவாளர்களில் பாண்டியராஜன் தவிர மற்றவர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எந்த முக்கியத்துவமும் தரப்படாததால், அவர்களிடமும் அதிருப்தி நிலவியது. இதை பயன்படுத்தி, அவர்களில் சிலரை இபிஎஸ் தரப்பு தங்கள் பக்கம்இழுத்துக்கொண்டது. இதுதொடர்பாக வெளியில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்த ஓபிஎஸ், தற்போது தேர்தல் நெருங்குவதால், வழிகாட்டுதல் குழுவை உடனே அமைக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தினார்.

அதன்பிறகு, செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் செயற்குழு கூட்டத்தில் இபிஎஸ் தரப்பினர், கட்சியில் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாக நிரூபிக்கும் வகையில், முதல்வர் வேட்பாளரை இப்போதே அறிவிக்க வேண்டும் என்று பேசினர். ஓபிஎஸ் தரப்பினரோ, அதை தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும், வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்கள் கருத்தை வலியுறுத்த, காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, அக்.7-ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பேசி, முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு, ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

வழிகாட்டுதல் குழு அமைப்பதாக உறுதி அளித்தால் அடுத்த கட்டமாக பேசலாம் என்று இந்த ஆலோசனையின் போது ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் பிறகு, தேனி புறப்பட்டு சென்ற அவர் தேனி, விருதுநகர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு விஷயத்தில் ஓபிஎஸ் விட்டுக்கொடுக்கக் கூடாது’ என்று அவர்களில் பலர் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதேநேரம், வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டால் கட்சியில் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தில் சிக்கல் உருவாகும் என்று இபிஎஸ் தரப்பினர் தயக்கம் காட்டுவதால், எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், நேற்று காலை ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தமிழக மக்கள், அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்’’ என்று பதிவிட்டிருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மக்கள், தொண்டர்கள் நலன்’ என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளதால், முதல்வரும் அதையொட்டியே செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று காலை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பி. தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கத்தையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது,வழிகாட்டுதல் குழு அமைப்பது,முதல்வர் வேட்பாளர் அறிவிப்புகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில், ஓபிஎஸ் நேற்று இரவு சென்னை வந்ததும், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அவருடன் ஆலோசனை நடத்துவதாகவும், இந்த ஆலோசனை இன்றும் தொடரும் எனவும் கூறப்படுகிறது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் இணைந்து நாளை அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பும் நடத்திவரும் தீவிர ஆலோசனைகளால் அதிமுக வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்