அண்ணா பல்கலைக்கழகப் பெயர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்க: கி.வீரமணி

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகப் பெயர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (செப். 24) வெளியிட்ட அறிக்கை:

''தமிழ்நாட்டின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது.

பாரம்பரியப் பெருமை பெற்றது!

கடந்த 42 ஆண்டுகளாக இது மிகவும் சிறப்பாக உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகமாக, கிண்டி பொறியியல் கல்லூரி என்ற நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற பாரம்பரியப் பெருமையும் பெற்றது. இதில் படித்து, தொழில்நுட்ப மேதைகளாகி, உலக நாடுகள் பலவற்றிலும் பழைய மாணவர்கள் சிறப்பான புகழ்பெற்றவர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.

இப்பல்கலைக்கழகம் 42 ஆண்டுகால வரலாற்றில் உலக நாடுகளில் உள்ள பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடனும், ஆராய்ச்சி நிறுவனங்களுடனும், தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் பல புரிந்துணர்வு (MOU - Memorandum of Understanding) ஒப்பந்தங்களையும் போட்டுள்ளது.

இதில் ஆராய்ச்சி செய்யும் பல மாணவர்களுக்கு உதவிகள் (Grants) மற்றும் ஆராய்ச்சிக்கான செலவுத் தொகைக்கான ஏற்பாடுகளும்கூட, இணைந்து நடைபெற்று வருகின்றன.

எதிர்கால வளர்ச்சியில் பெரும் பின்னடைவும், முட்டுக்கட்டையும் ஏற்படும்

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் சட்டத்தை அவசரக் கோலத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளதால், பெரும் சட்டச் சிக்கலும், பல்கலைக்கழக எதிர்கால வளர்ச்சியிலும் பெரும் பின்னடைவும், முட்டுக்கட்டையும் ஏற்படக்கூடும்.

இதற்கு முன்னே இதுபற்றி ஆராயும் குழுவில், அதன் கல்வி நிபுணர்களோ, பேராசிரியர்களோ, ஓய்வுபெற்ற அதன் நிர்வாகிகளோ இடம்பெறாமல் வெறும் 5 அமைச்சர்கள் குழு என்று மட்டுமே போட்டது அடிப்படையான அணுகுமுறை கோளாறு ஆகும்.

அண்ணா பல்கலைக்கழக வேந்தருக்குக் கடிதம்!

இப்போது இதனால் ஏற்படும் பாதகங்களையும், வளர்ச்சிக்கான தடைகளையும் பற்றி அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், முன்னாள் இயக்குநர், மூத்த ஓய்வுபெற்ற தொழில்நுட்பக் கல்வியாளர் பேராசிரியர் டி.ஆர்.ஜெகதீசனும், அண்ணா பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஒரு விண்ணப்பம் மூலம் விரிவாக விளக்கிக் கடிதமும் எழுதியுள்ளது இன்று நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐ.ஓ.இ தகுதியைத் தக்கவைத்துக் கொள்ளவும், பல்வகை ஆராய்ச்சியாளர்களின் (ஸ்கோப்பஸ் இன்டெக்ஸ்) (Scopus Index) Qs Index, H Index, ilo Index முதலியவை தொடரவும், பழைய பெயர் இருந்தால் மட்டுமே முடியும்; இல்லாவிட்டால் உலக அளவில் பல நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் உள்ளதால் அவற்றில் பெரும் சட்டச் சிக்கல்கள் ஏற்படும்.

ஆளுநர் ஒப்புதல் தராமல் மசோதாவை திருப்பி அனுப்புவது சாலச் சிறந்தது!

எனவே, மறுபரிசீலனை அவசியம் செய்யப்பட வேண்டும். இது அவசரம், அவசியம். அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், சட்ட மசோதாவினை மறுமுறை பரிசீலிக்க தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்புவதும் சாலச் சிறந்தது!

இது முழுக்க முழுக்க அண்ணா பல்கலைக்கழக வளர்ச்சி, அங்குள்ள ஆய்வாளர்களின் தொடர் ஆராய்ச்சிப் பணியால் எழும் நியாயமான கோரிக்கையே தவிர, எந்த அரசியல் நோக்கமும் உடையதல்ல.

மறுபரிசீலனை செய்க!

அதோடு, பல மாணவர்களுக்கு அளித்து வந்துள்ள கல்வி உதவித்தொகைகளும், நிறுத்தப்பட்டுள்ளதால், ஆராய்ச்சி மாணவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்து, அது தொடர வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்களது ஆராய்ச்சி, படிப்பு தடையின்றி தொடர, தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும் மனிதநேயத்தோடும், கருணை உள்ளத்தோடும் இதனை மறுபரிசீலனை செய்வதும் அவசர அவசியமாகும். இதுபற்றி விரைந்து முடிவு எடுப்பது முக்கியமாகும்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்