இளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக ஊரடங்கு காலத்திலும் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு காலத்திலும் இளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் இறுதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், விபத்துகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள், சமூக மோதல்கள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இளம் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

இவர்கள் பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம், வசிப்பிடம், பயணிக்கும் வாகனம் என பல்வேறு இடங்களில் வயது வித்தியாசமின்றி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெரும்பாலும் தெரிந்த நபர்களாலேயே, பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை விசாரிக்க மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.

மாநகர காவல்துறையில் கூடுதல் துணை ஆணையர் தலைமையிலும், மாவட்ட காவல்துறையில் கூடுதல் எஸ்.பி தலைமையிலும் ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு’ உள்ளது.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை கோவையில் 47, ஈரோட்டில் 55, நீலகிரியில் 41, திருப்பூரில் 30, சேலத்தில் 34, நாமக்கல்லில் 32, தருமபுரியில் 35, கிருஷ்ணகிரியில் 22 வழக்குகள் என மேற்கு மண்டலத்தில் மொத்தம் 296 ‘போக்ஸோ’ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பு, அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக புகைப்படங்களை பரிமாற்றம் செய்தல், ஆபாச வீடியோக்கள் பார்த்தல் போன்றவற்றின் விளைவாக பாலியல் ரீதியிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிகளில் உளவியல் ஆலோசகர் நியமிக்க வேண்டும். புகார் பெட்டி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இளம் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தனிமையை விரும்பும் இளம் பெண்களிடம் பெற்றோர் இயல்பாக பேச்சுக் கொடுத்து, அவர்களது குறையை கேட்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டால், பயப்படாமல் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்’’ என்றனர்.

மேற்கு மண்டல காவல்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘பாலியல் குற்றம் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர், அச்சமின்றி புகார்களை தெரிவிக்கின்றனர்.

பெண்கள் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்