யூடியூப், முகநூல், ட்விட்டர் காணொலிகள்; தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம்

By செய்திப்பிரிவு

யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காணொலிக் காட்சிகளைத் தணிக்கை செய்ய தனிவாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கடவுள் நிந்தனை, சமூக நிந்தனை, சாதி, மத விரோதக் கருத்துகள், தனிப்பட்ட பிரபலங்களை அவதூறு செய்வது, இல்லாத விஷயத்தை இட்டுக்கட்டி செய்தியாக வெளியிடுவது, பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது, கருத்துக் கூறுவது, அதன் மூலம் சர்ச்சையை உருவாக்குவது, தேசியக்கொடி, தேசச் சின்னங்களை அவதூறாகப் பேசுவது ஆகியவை நிகழ்கின்றன. இவற்றில் யூடியூப், ட்விட்டர், முகநூல் ஆகியவை முன்னணிப் பங்கு வகிக்கின்றன.

சமீபத்தில் கர்நாடகாவில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரின் பதிவால், பெரும் கலவரம் மூண்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 3 பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இவ்வாறு பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறி வருகின்றன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காணொலிகளைத் தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருகின்றனர். இதனால் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதுபோன்ற சூழலில் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய காணொலிகள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறும்படம் என்ற பெயரில் ஆபாசக் காணொலிகள் அதிகம் பதிவிடப்படுகின்றன. இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர், அங்கு பதிவிடும் காணொலிகளைத் தணிக்கை செய்ய எவ்விதத் தணிக்கை முறையும் இல்லை.

திரைப்படங்களைத் தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல, சமூக வலைதளங்களைத் தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். காணொலிகளைத் தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் காணொலி வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது முக்கிய வழக்கு என்பதால் பதில் மனுத்தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரினார்.

இதனையடுத்து நீதிபதிகள் மத்திய மற்றும் மாநில அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

41 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

39 mins ago

சினிமா

57 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்