மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று அமைச்சர் தங்கமணி பொய் சொல்கிறார்; ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி பொய் சொல்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 21) தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

"கரோனா நோய்த் தொற்று ஒரு பக்கம் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அதிமுக அரசு மக்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கொள்ளை நோய்க் காலத்தில் மக்களைக் காக்கத் தவறிய மாநில அரசு, மின் கட்டணம் என்ற பெயரால் அநியாயக் கொள்ளை நடத்திக் கொண்டு இருக்கிறது.

இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை, ஊதியம் இல்லை; தொழிலும் இல்லை; வருவாயும் இல்லை. அதை மனதில் வைத்து மின் கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் பழனிசாமி அரசு மின் கட்டணத்தை அளவுக்கு மீறி அதிகப்படுத்தி, தன் பங்குக்கு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.

இதனைக் கேள்வி கேட்டால், மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று பச்சைப் பொய்யை அறிக்கையாக வெளியிடுகிறார் மின்துறை அமைச்சர் தங்கமணி. பொதுமக்கள், மின் கட்டணம் அநியாயமாக உயர்த்தப்பட்டு, அதனால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அமைச்சர் பார்க்கவில்லையா? பார்த்துவிட்டு மழுப்பிக்கொண்டு இருக்கிறாரா?

இத்தகைய மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுகவின் சார்பில் இன்று காலையில் கண்டன முழக்கம் எழுப்பிக் கண்டித்தோம். கறுப்புக் கொடி தாங்கி தமிழக அரசுக்கு எதிர்ப்பைக் காட்டினோம். திமுகவினர் மட்டுமல்ல ஏராளமான பொதுமக்களும் இதில் பங்கெடுத்தார்கள்.

இதன் பிறகாவது மின் கட்டணத்தை ஒழுங்குபடுத்துங்கள். குறையுங்கள்; சலுகை காட்டுங்கள்; மக்கள் மீது கருணை வையுங்கள் என்று அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்