சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் மருத்துவமனையில் அனுமதி: 3 காவலர்கள் மதுரை மத்திய சிறையில் அடைப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரில் 3 காவலர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 பேர் கைது
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் 5 பேர் கைது
இந்நிலையில், சம்பவம் நடந்த ஜூன் 19-ம் தேதி இரவு மற்றும் 20-ம் தேதி பகலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட மேலும் 14 காவலர்களை சிபிஐடி போலீஸார் நேற்று அதிகாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்.பி.க்கள் விஜயகுமார், மாடசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பகல் முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை முடிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரையும் நேற்று இரவு 9.30 மணியளவில் சிபிசிஐடி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 201, 342, 107 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எஸ்ஐ வாக்குவாதம்
பின்னர் 5 பேரும் இரவு 10 மணியளவில் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை 'எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களால் எனது வாழ்க்கையே பறிபோய்விட்டது' என ஆவேசமாகக் கத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அவரைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூவரும் மருத்துவப் பரிசோதனை முடிந்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் அவரது வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் ஹேமா உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் இன்று அதிகாலை 2 மணியளவில் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 பேர் மருத்துவமனையில் அனுமதி
அதேநேரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவருக்கும் உடல்நிலை பாதிப்பு காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் நெஞ்சுவலி, அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, மயக்கம் போன்றவை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, அதிகாலை 2.15 மணியளவில் மருத்துவமனைக்கே நேரில் வந்து, அவர்கள் இருவரையும் ஜூலை 23-ம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இருவருக்கும் உடல்நிலை சீராகாததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரைக்கு மாற்றம்
இதற்கிடையே பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூவரும் இன்று காலை 6.15 மணிக்கு மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் மதுரை சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் இதுவரை மொத்தம் 10 பேரைக் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

வணிகம்

20 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்