கரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும்; தற்கொலை, ஓடிச்செல்வது கூடாது: ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜூன் 27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார மையத்தின் கருத்துகளைக் கேட்டு கரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். நாளொன்றுக்கு 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சென்னையில் நாளொன்றுக்கு 3,000 பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 9,000-10,000 ஆக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூன் 26) வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துள்ளோம்.

முன்பே ஏன் பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை எனக் கேள்வியெழுப்புகின்றனர். ஆரம்பத்தில், கரோனா பரிசோதனை மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். படிப்படியாகத்தான் அனுமதி அளித்தது. தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் 70% அரசுப் பரிசோதனை மையங்கள்.

எண்ணிக்கையை வைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழ்நாட்டின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். பட்டிதொட்டியெல்லாம் சென்று இரவு, பகலாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அறிகுறியற்ற தொற்றாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. சிகிச்சை அளிக்காததால் ஒருவர் உயிரிழப்பதைத் தடுக்க இதுதான் வழி.

காய்ச்சல் முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களைத் தாங்களே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சென்னையில் காய்ச்சல் முகாம்களை நாளொன்றுக்கு 35 ஆயிரம் மக்கள் பயன்படுத்துகின்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், இதுவரை 9,539 தெருக்களில் மட்டும்தான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், 7,421 தெருக்களில் 3-க்கு மேற்பட்டவர்களும், 812 தெருக்களில் 5-க்கும் மேற்பட்டவர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் கரோனா தொற்று மற்றவர்களுக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது. சென்னையில் 1,979 குடிசைப் பகுதிகள் உள்ளன. கண்ணகி நகர், எழில் நகர், திடீர் நகரில் வெற்றிகரமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. பொதுமக்களின் ஒத்துழைப்பால் இங்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு எல்லோரும் முகக்கவசம் அணிகின்றனர்.

இது புதிதாக உருவான நோய். இது அதிகமான மக்களுக்கு வந்த பின்னர்தான் இறங்கும் என்பது பொது சுகாதாரத்துறையின் கருத்து. இதை நமக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால் 100% முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள், முதியவர்களைப் பொத்திப் பாதுகாக்க வேண்டும். அதுதான் மருத்துவம் சாராத முறை. இதற்குப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இந்திய மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், ஐ.சி.எம்.ஆர். என அனைத்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, நோய் வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான உணவு, அலோபதி மருத்துவம் வழங்கப்படுகிறது. 'ரெம்டெசிவிர்' வரை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கெனவே உள்ள மருந்துகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. 11 வகையான சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்படுகின்றன.

கரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 56% மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1.28% தான் இறப்பு விகிதம். ஒருவர் இறந்தாலும் இறப்புதான். அதனை நியாயப்படுத்தவில்லை. ஆனால், தொற்று வந்தவுடன் தற்கொலை செய்வது, ஓடிச்செல்வது கூடாது. தொற்று வந்தவர்களை வசிக்கும் பகுதிகளில் புறக்கணிக்கக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலேயே இது வேகமாகப் பரவுகிறது, மற்றபடி, சளி, காய்ச்சல் போன்று இதுவும் சாதாரணமானதுதான். இதர நோய்களுடன் இது வித்தியாசமானது அல்ல.

தடுப்பு மருந்து, சிகிச்சை மருந்துகள் உலக அளவில் நிச்சயம் கண்டுபிடிக்கப்படும். பிளாஸ்மா சிகிச்சைக்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. சித்த மருத்துவத்திற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இறப்பைத் தவிர்ப்பதுதான் முதன்மையான நோக்கம். இறப்புகள் குறித்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. குணமடைபவர்கள் எப்படி குணமடைகின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கும் மன அழுத்தம் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. யாராக இருந்தாலும் 104 என்ற தொலைபேசி எண்ணை அணுகி ஆலோசனை பெறலாம். யாரை வேண்டுமானாலும் பரிசோதனை செய்வது சிறந்ததல்ல. நோய்த் தடுப்புப் பகுதியில் உள்ளவர்களைப் பரிசோதிக்கிறோம். ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிசோதிக்கிறோம்".

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்