கரோனா பரவலைத் தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது: முதல்வர் பழனிசாமி பாராட்டு

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி இன்று (ஜூன் 25), கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:

"கோவை மாவட்டத்தில் கரோனோ வைரஸ் தொற்று நோய், அரசின் வழிகாட்டுதல்களின்படி, எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். சென்னைக்கு அடுத்து, கோவைதான் மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிகமான மருத்துவமனைகள் உள்ள மாவட்டம் கோவை மாவட்டம். உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளைக் கொண்டதும் கோவை மாவட்டம் தான்.

அதனடிப்படையில், கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 10 பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தனியார் மற்றும் அரசு சார்பாக நாள் ஒன்றுக்கு 2,000 நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கின்றார். இதுவரை, சுமார் 37 ஆயிரத்து 95 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களில் கரோனா வைரஸ் சோதனையின் மூலமாக 'பாசிட்டிவ்' உள்ளவர்கள் பூரண குணமடைவதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, இன்றையதினம் 219 நபர்கள்தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற விவரத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அதோடு, அரசு மற்றும் தனியார் சார்பாக சுமார் 3,026 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் நடைபெறுகின்ற திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேற்கொள்ளவிருக்கிற பணிகள் குறித்தும், மாநகராட்சி, பொதுப் பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நடைபெறுகின்ற பணிகள் குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக கோவை மாநகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதற்காக 3-வது குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதற்கட்டமாக 166 கோடி ரூபாயில் பில்லூரில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. நில எடுப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, குறித்த காலத்தில் கோவை மாநகர மக்களுக்கு நிலையான தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எல்.இ.டி. விளக்குகளாக முழுவதும் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் மின் தேவை குறைந்திருக்கிறது.

நெடுஞ்சாலைத் துறை மூலமாக பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. சேலத்தை விட அதிகமான பாலப் பணிகள் கோவை மாவட்டத்தில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்களோடு நான் சொல்கிறேன். மேலும், கோவை மாநகரத்தில் அதிக நீளமுள்ள பாலங்கள் கட்டுவதற்கு விரைவில் டெண்டர் விடப்படும்.

கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதனாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டிய காரணத்தினாலும், போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு மாநகரமாக உருவாக்க வேண்டுமென்பதற்காகத்தான் தமிழக அரசால், இவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல, நவீன பேருந்து நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம்-கோவை மாநகரத்திற்குள் அதிக வாகனங்கள் வருவதைத் தவிர்ப்பதற்காக மேற்குப் புறவழிச் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே அதிகமான பணிகள் நடைபெறுகின்ற மாவட்டம் கோவை மாவட்டம். பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, குடிசை மாற்று வாரியம் என அனைத்துத் துறைகளிலும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாவட்டம் கோவை மாவட்டம் தான் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கோவை மாவட்டம் டெக்ஸ்டைல், விவசாயம் என அனைத்து வளங்களும் நிறைந்த ஒரே மாவட்டமாக இருக்கின்ற காரணத்தினால், இங்கே அதிகமானவர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அனைத்து வளங்களும் பெற்ற கோவை மாவட்டத்திற்கு, தமிழக அரசால், அனைத்துத் துறைகளிலும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கேயுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் வைக்கின்ற கோரிக்கைகள் முழுவதையும் நிறைவேற்றுகின்ற நிலையில் தமிழக அரசு இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கோவை மாவட்டத்திற்குத்தான் அதிகமான நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது. அதிகமான கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மாவட்டம் என்று சொன்னால் அது கோவை மாவட்டம் தான் என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். தமிழக அரசைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் துறை அமைச்சர் குறிப்பிட்டதைப் போல அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டு, சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசு அறிவித்த திட்டங்கள் முழுவதும் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே, கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் இந்த மாவட்டத்தில் பணிபுரிகின்ற அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் மனமார, உளமாரப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்