10 லட்சம் மாணவர்கள் உயிருக்கு யார் பொறுப்பேற்பது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி: வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளிவைப்பு 

By செய்திப்பிரிவு

ஜூலையில் 2 லட்சம் அளவுக்கு கரோனா பாதிப்பு இருக்கும் என்பதால் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக அரசுத் தரப்பு பதில் அளித்தது. இதனையடுத்து 10 லட்சம் மாணவர்கள் உயிருக்கு யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10-ம் வகுப்புத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களைத் திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அரசு அறிவித்த பொதுத்தேர்வை இரண்டு மாதங்களுக்குத் தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர் தரப்பில், “கரோனோ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. தேர்வுக்கு முன்பாக மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டியதும் அவசியம்.

பள்ளிகளைத் திறப்பது குறித்தே ஜூலையில் முடிவெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில். 30% மாணவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளனர். எனவே ஜூலை மாதத்துக்குத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனத் தெரிவித்தது.

''லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும்போது தனி மனித இடைவெளி போன்ற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் சிக்கல் எழாதா? ஒரு மாதம் தள்ளிவைக்காமல் தேர்வை நடத்த ஏன் அரசுத் தரப்பில் அவசரம் காட்டப்படுகிறது? மாணவர்களின் தலைக்கும் மேல் கத்தி தொங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, பொதுத் தேர்வுக்கான தேதியை அறிவித்த வேளையில் கரொனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வதைக் கவனிக்கவில்லையா அரசு?

கரோனா தொற்று பாதித்த 35 ஆயிரம் பேரில் 26 ஆயிரம் பேர் வடசென்னையில் மட்டுமே உள்ளனர். ஜூன் 30 வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்கிற நிலையில், 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த் துறை என அனைவரும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக வேண்டுமா?

ஊரடங்கு காலத்திலேயே 10-ம் வகுப்புத் தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது? பள்ளிகளைத் திறப்பது குறித்து ஜூலையில்தான் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசு வழிகாட்டுதல் வெளியிட்டுள்ள நிலையில், அதை நீங்களே மீறுவீர்களா ? 9 லட்சம் இளம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது” என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், “10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஜூன் 15-ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. கரோனா தொற்றுப் பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் அல்லது ஜூலை 2-வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா ? என்பதை இன்று மதியம் 2:30 மணி அளவில் அரசுத் தரப்பு தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் மதியம் 2-30 மணிக்கு தொடங்கிய வாதத்தில். அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தனது வாதத்தை முன்வைத்தார்.

அவரது வாதத்தில், “ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகள் 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு. மற்ற 11 மாநிலங்கள் தேர்வை நடத்திவிட்டன. தமிழகத்திலும் தேர்வை நடத்த அனுமதிக்கவேண்டும். மத்திய அரசு தேர்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. தேர்வு மையங்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல், மாணவர்கள் மாஸ்க் அணிந்து வருவது உள்ளிட்ட மத்திய அரசு அறிவித்த நடைமுறைகள் பின்பற்றி நடத்தப்படும். அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தேர்வு நடத்துவதால் மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது. மாணவர்கள் வாழ்வை இழந்த பிறகு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக அவர்களின் வாழ்வுக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர், ''மார்ச் மாதம் தொடங்கிய கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு கரோனா தொற்று ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதே நிலைதான் தொடர்ந்து இருக்கும். ஜூலை மத்தியில் பார்க்கும்போது 2 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அக்டோபர், நவம்பரில் இந்த நிலை உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எனவே, சரியான நேரத்தில்தான் தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அபாயம் இல்லை. தேர்வைத் தள்ளி நடத்துவதால் தான் அபாயம் அதிகமாக இருக்கும். தேர்வு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டால் பேராபத்தாக அமையும் என்பதால்தான் ஜூன் 15-ம் தேது முதல் 25-ம் தேதி வரை நடத்த அரசு முடிவெத்துள்ளது. தற்போது மாணவர்கள் பாதுகாப்பாகத் தேர்வை எழுதும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.

“பொதுவாக தேர்வு எழுத வரும் மாணவர்கள் சிறுவர்கள் என்பதால் நோய்த்தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளது. இது ஒரு மாணவர் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. 9 லட்சம் மாணவர்கள் மற்றும் 4 லட்சம் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆபத்தில் உள்ளது பற்றி அரசு கவலை கொள்ளவில்லையா? 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தற்போது பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர், “தேர்வைத் தள்ளிவைக்கவேண்டும், ரத்து செய்ய வேண்டும் என்கிற வழக்குகள் அனைத்தும் வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வருவதால் கூடுதல் ஆவணங்களுடன் 10-ம் தேதி வரை எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்க வசதியாக இந்த வழக்கையும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” எனக்கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அரசின் கோரிக்கையை ஏற்று ஜூன் 11 அன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் 11-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

''தேர்வைத் தள்ளிவைக்க முடியுமா என தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அதேசமயம் தொற்று தீவிரமடையும் நிலையில் தேர்வைத் தள்ளிவைப்பது உகந்ததாக இருக்குமா என மாணவர்களும் பெற்றோர்களும் யோசிக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருண் ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பள்ளிக்கல்வித் துறை வழக்குகளுக்கான அரசு சிறப்பு வழக்கறிஞர் முனுசாமி ஆகியோர் ஆஜரானார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

வலைஞர் பக்கம்

8 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

14 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்