ஐந்தாம் ஆண்டில் அதிமுக அரசு; தொடர் வெற்றி  தொடரும் : ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை

By செய்திப்பிரிவு

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு தமிழ் நாட்டு உரிமைகளைக் காப்பதிலும், தமிழ் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், அம்மா அவர்களின் வழியிலேயே திறம்பட செயலாற்றும் என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிக்கை விட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் இருவரும் இன்று வெளியிட்ட அறிக்கை:

“நம் இதயத்தில் என்றும் வாழும் பாசமிகு அம்மா அவர்கள் தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நாளின், நான்காம் ஆண்டு நிறைவுற்று 23.5.2020-ல் ஐந்தாம் ஆண்டு தொடங்குகிறது.

அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய சாதனையைப் போல, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் அரசாக, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் தன்னந்தனியாக களம் கண்டு, தொடர் வெற்றி மூலம் மீண்டும் அதிமுக அரசை அமைத்த மகத்தான சாதனையாளர் நம் அம்மா அவர்கள்.

இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்குத் தொண்டாற்றும்; ஆயிரம் தலைமுறை செழிக்க வந்த பேரியக்கம் அதிமுக என்பதை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் சூளுரையாக அவர்கள் முழங்கியது நம் செவிகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றரைக் கோடி கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பாலும், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவாலும், அஇஅதிமுக அரசை வழிநடத்தி வருகிறோம். அதன் விளைவாக,

* மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழ் நாடு முதலிடம்.

* ரூபாய் 11,250 கோடியில் காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க `நடந்தாய் வாழி காவேரி’ திட்டம்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை நாட்டிலேயே திறம்பட செயல்படுத்திய மாநிலம் என்று மத்திய அரசு, அரசைப் பாராட்டியது.

* வேளாண்மை உற்பத்தியில் அரசு, மத்திய அரசு வேளாண் துறையின் `கிருஷி கர்மான்’ விருதினை தொடர்ந்து 5 முறை பெற்றுள்ளது.

* உள்ளாட்சி நிர்வாகப் பணிகளில் தமிழக அரசு, திறம்பட செயல்பட்டு மத்திய அரசின் பாராட்டினைப் பெற்றிருக்கிறது.

* கிராமப்புற தூய்மையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழக அரசு, பிரதமரிடம் இருந்து விருதினைப் பெற்றிருக்கிறது.

* மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை, உயர்கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த செயல்பாடு காரணமாக மத்திய அரசின் சிறப்பு விருதினைப் பெற்றிருக்கிறது.

* முதல்வர் அவர்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மூலம் 8,835 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு.

* துணை முதல்வர் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் மூலம், தமிழ் நாட்டில் குறைந்த செலவில் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தில் GSA என்ற அமெரிக்க நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 750 கோடி ரூபாய்) முதலீடு செய்யவும்; தமிழ் நாடு வீட்டு வசதித் துறைக்கென 5,000/- கோடி ரூபாய் கடன் உதவியை உலக வங்கி அளித்திடவும் வகை செய்யப்பட்டிருக்கிறது.

* பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, காவேரி டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டு தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் காப்பாற்றப்பட்டுள்ளது.

* புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட பெருமுயற்சிகளின் காரணமாக, இப்பொழுது கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல், பெருந்துறையில் செயல்பட்டு வந்த IRT மருத்துவக் கல்லூரியானது அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

*புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அமைத்துத் தந்த கழக அரசால், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும் முயற்சியில், தமிழ் நாட்டில் புதிதாக 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

* நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

* தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை கூறும் ஜல்லிக்கட்டு, கழக அரசு மேற்கொண்ட அயரா முயற்சியின் காரணமாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தடையின்றி நடத்தப்படுகிறது.

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு `பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* காவிரி - கோதாவரி நதிகளை இணைப்பதன் மூலம் தமிழ் நாட்டிற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் பெற்று அதனை தென் தமிழகத்திற்கும் கொண்டு செல்ல முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

* முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் 5,11,866 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தகுதியானவைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

*அத்திக்கடவு-அவினாசி நீர்ப் பாசனத் திட்டம்; மேட்டூர் அணையில் இருந்து சரபங்கா ஆற்றுக்கும், சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

*தமிழ் நாட்டின் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

* உலக முதலீட்டாளர்களை தமிழ் நாட்டில் முதலீடு செய்யத் தூண்டும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

*சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3,00,431 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

* 2.05 கோடி குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுப் பொருட்களுடன் 1,000/- ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டிருக்கிறது.

*மகளிர் பாதுகாப்பிற்கு ``காவலன் செயலி’’ அறிமுகப்படுத்தியது.

* கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைத் தொழிலாளர்கள் சுமார் 80 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

* உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா என்னும் நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தேவையான மருத்துவப் பணிகளில் அரசு முழு மூச்சாக இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

* கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் சமைத்த, சத்தான உணவு, ரேஷன் அட்டை உள்ள குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணத் தொகை, இரண்டு முறை கூடுதலாக அரிசி, மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், பல்வேறு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா 2,000/- ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், வாரியங்களில் உறுப்பினர்கள் அல்லாத தொழிலாளர்களுக்கும் தலா 2,000/- ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

* பெரும் புயல்கள், வெள்ளம், வறட்சி என்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் மக்களின் துயர் துடைத்து, மறுவாழ்வு அளிக்க நாம் அயராது உழைத்தோம்.

* கட்சியினர் தமிழ் நாடு முழுவதும் தங்கள் சொந்த செலவில் பல லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பணிகள் எல்லாம், மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற கட்சியின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு சில எடுத்துக்காட்டுகளேயாகும். இன்னும் பட்டியலிட அரசின் சாதனைகள் ஏராளமாக அணிவகுத்து நிற்கின்றன. நாம் செய்திட்ட பணிகள் ஏராளம். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு.

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு தமிழ் நாட்டு உரிமைகளைக் காப்பதிலும், தமிழ் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், அம்மா அவர்களின் வழியிலேயே திறம்பட செயலாற்றும் என்பதை நாங்கள் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

நம் இருபெரும் தலைவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய கட்சி உடன்பிறப்புகள் அனைவரும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பணியாற்றி, கட்சிக்கும் அரசுக்கும் புகழ் சேர்ப்போம். தொடர் வெற்றிபெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம்”.
இவ்வாறு அவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சுற்றுலா

36 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்