குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

By செய்திப்பிரிவு

குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (மே 18) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு, தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் 2020, புதிய வேளாண் ஆராய்ச்சி நிலையம், பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையம், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல் போன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சி அடியாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும்.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரினை விவசாயிகள் திறம்பட பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கீழ்க்கண்ட அறிவுரைகளையும் துறை அலுவலர்களுக்கு நான் வழங்கியுள்ளேன்.

1. டெல்டா பகுதிகளில் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. பொதுப்பணித்துறையின் மூலம் ஏ & பி பாசன வாய்க்கால்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் சி & டி பாசன வாய்க்கால்களும் விரைவாக தூர்வாரப்பட வேண்டும். பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அனைத்து டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

3. குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறுகிய கால நெல் ரக விதைகளை தேவையான அளவு இருப்பில் வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும்.

4. நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழுவை இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

5. நெல் சாகுபடிக்கு தேவைப்படும் ரசாயன உரங்களை போதுமான அளவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் உயிர் உரங்கள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைத்து விநியோகிக்க வேண்டும்.

6. கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் ஜுன் 12 ஆம் தேதிக்குள் நாற்று விட்டு, நடவுப் பணியினை முடிக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் தங்கள் பகுதி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

7. மேலும், கிணற்று நீர் வசதி இல்லாத விவசாயிகளின் நலனுக்காக, அந்தந்த கிராமத்தில் கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உதவியுடன், மே மூன்றாம் வாரத்திலேயே தேவையான அளவு நாற்று விட்டு, ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் வாய்க்காலில் நீர் வந்தவுடன் நிலம் தயார் செய்து, நடவுப் பணியினை மேற்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சமுதாய நெல் நாற்றங்கால் அமைப்பதற்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.

8. அதிக மகசூல் தரும் தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர நடவு முறையினை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. கோடை உழவு, பசுந்தாளுரப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை மேற்கொள்வதற்கு தேவையான பயிர்க் கடன் வசதி பெறுவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாக் கடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

11.மேலும், தற்போது நிலவிவரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட தனிமனித இடைவெளியினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு, 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. இன்று நான் அறிவித்த அறிவிப்பின் மூலம் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொண்டு உயர் விளைச்சல் பெற்றிட வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு தமிழக அரசு 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, இது வரை சுமார் 22.81 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துள்ளது. மீதமுள்ள நெல்லை விரைவில் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை படைக்கப்பட உள்ளது.

போதிய அளவு நீர் இல்லாத சூழ்நிலையிலும், நவீன பாசன முறைகளை கடைபிடித்து, உணவு தானிய உற்பத்தியில் சாதனை அளவைக் கடந்து மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதினை 5 முறை தமிழ்நாடு பெற்றுள்ளது.

தற்போது, உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் சூழல் உள்ளதால், இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் நமது மாநிலம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என நம்புகிறேன்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

7 mins ago

இந்தியா

15 mins ago

க்ரைம்

12 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்