பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் கரோனா தடுப்பு திட்டப் பகுதிகளாக அறிவிப்பு- சென்னையில் 80 தெருக்கள் அடைப்பு; 24 மணி நேர கண்காணிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் கரோனாபாதிப்பு அதிகமாக உள்ள 80 பகுதிகள் நோய்த் தொற்று தடுப்புதிட்டப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு நடந்துவரும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் கடந்த 14-ம்தேதி வரை 206 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்க மாநகராட்சியில் ‘நோய்த் தொற்று தடுப்பு திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் வசிக்கும் 80 தெருக்களில், அனைத்து வழிகளிலும்தடுப்பு ஏற்படுத்தி, போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நிழற்பந்தல் அமைத்து,மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.

இப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது. அவர்கள் பயன்படுத்தும் முகக் கவசங்கள், கையுறைகள் மீது பிளீச்சிங் பவுடர் அல்லது சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசலை தெளித்து மஞ்சள் நிற பைகளில் போட்டு தனியாக வழங்கப்படுகிறது. வீடுகளின் முகப்பு பகுதிகள், தெருக்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் வீட்டை சுற்றி உள்ள 2,500 வீடுகளில் மாநகராட்சி பணியாளர்கள் தினமும் சென்று யாருக்கேனும் இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். அறிகுறி தெரிபவர்களிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் வீட்டுதனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று இல்லை என முடிவு வந்தாலும், வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் ரூ.1,000 நிவாரண உதவி மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட இலவச பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக மாநகராட்சி உதவியுடன் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டன.

ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 66 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. அங்கு 26 நோய்த்தொற்று தடுப்பு திட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிகுறிஉள்ளவர்களிடம் தொண்டை திரவமாதிரிகள் சேகரிக்க, பிரத்யேக கண்ணாடி கூண்டுகளுடன் 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மாநகரம் முழுவதும்25 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,545 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் நடமாடும் அங்காடிகள் மூலமாக இவர்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. பால், மருந்துகள் தேவைப்பட்டால், மாநகராட்சி பணியாளர்கள் வாங்கித் தருகின்றனர்.

பாதிப்பு அதிகம் காணப்படும் மண்ணடியில் தொற்று கண்டறியப்பட்ட தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. வெங்கட தெருவில் ஒரே வீட்டில் 4 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள கரோனா கண்காணிப்பு செயலி மூலமாக, நோய்த் தொற்று தடுப்பு திட்டப் பகுதிகளை மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்