உதவக்கூடாது என்று சட்டத்தைக் காட்டி மிரட்டுவது துளியும் மனித நேயமற்ற செயல்; தமிழக அரசு மீது தினகரன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

தவிப்பவர்களுக்கு யாருமே உதவக்கூடாது என்று சட்டத்தைக் காட்டி மிரட்டுவது துளியும் மனித நேயமற்ற செயல் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஏப்.13) வெளியிட்ட அறிக்கையில், "ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை யாரும் நேரடியாக வழங்கக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது மனித நேயமற்ற செயலாகும். கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.

கரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளும், தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லா வகையிலும் பக்கபலமாகவே இருந்து வருகின்றன. ஆனால், 20 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் பலரும் உணவுக்காகவும், உணவுப் பொருட்களுக்காகவும் தத்தளித்து வரும் செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு உதவ மற்றவர்கள் முன்வருகிறார்கள்.

ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் செய்வதைப் போன்று அரசே சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்த வயிறுகளுக்கு உணவிட்டிருந்தால், மற்றவர்கள் ஏன் அதனைச் செய்யப் போகிறார்கள்? நோயைத் தடுக்க களத்தில் நின்று உழைப்பவர்களுக்கு முகக் கவசங்களையும், தற்காப்பு மருத்துவ உபகரணங்களையும் அரசே வழங்கியிருந்தால் மற்றவர்கள் ஏன் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறார்கள்?

கோவிட் -19 நோயைக் கண்டறிவதற்கான மருத்துவ உபகரணத்தைக் கூட சரியான நேரத்தில் வாங்க முடியாமல், நோயின் தாக்கம் அதிகமான பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் அரசு நிர்வாகம், அடிப்படைத் தேவையான உணவு மற்றும் உணவுப்பொருட்களை நல்ல உள்ளம் கொண்டவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதைத் தடுப்பது எந்த வகையில் நியாயம்?

இந்த இக்கட்டான நேரத்தில் தனிமனித விலகல் மிக முக்கியமானது என்பதால் கூட்டம் சேருவதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளைத்தான் செயல்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியரகங்களில் கொண்டுபோய் மொத்தமாக கொடுக்க வேண்டும் என்றால், அந்தப் பொருட்கள் அந்தந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேராது என்பதை உணர வேண்டும்.

சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் இது நடைமுறை சாத்தியம் இல்லாதது. அதுமட்டுமில்லாமல், தமக்குப் பக்கத்தில் துன்பத்தோடு தவிப்பவர்களுக்கு யாருமே உதவக்கூடாது என்று சட்டத்தைக் காட்டி மிரட்டுவது துளியும் மனித நேயமற்ற செயலாகும்.

அதே நேரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவிகளை வழங்கியபோது எந்தச் சிக்கலும் எழவில்லை. ஆனால், ஊரடங்கை மீறி கட்சித் தலைவர்களே நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கும்போது விதிகளுக்கு புறம்பாக தொண்டர்களும் அங்கே கூடுவதால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் ஒவ்வொரு நாளையும் வேதனையோடு கடந்து வரும் நிலையில், அரசு எந்திரம் ஒருங்கிணைந்து பயணிக்காமல் முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இடையில் சுய விளம்பரத்திற்காக பனிப்போர் நடப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

அதுபோன்றே வழக்கம் போல சவால் பேட்டி, அறிக்கை யுத்தம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என அக்கப்போர் சண்டை போட்டு வரும் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவரும் தங்களின் அரசியல் விளையாட்டுகளைக் கொஞ்சம் காலத்திற்கு நிறுத்தி வைத்துவிட்டு, மிகப்பெரிய சோதனைக்காலத்தில் மக்களை மீட்டெடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

வலைஞர் பக்கம்

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்