அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்-  விராலிமலை வாக்காளரின் பகிரங்க கடிதம்

By கரு.முத்து

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் என்ன பிரச்சினையாக இருந்தாலும் அதனை தற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு அமைச்சரின் சுறுசுறுப்பையும், அனுபவத்தையும் இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று தமிழக முதல்வருக்கு (விஜயபாஸ்கரின் சொந்தத் தொகுதியான) விராலிமலை தொகுதி வாக்காளர் ஒருவர் எழுதியதாக கடிதம் ஒன்று இணையத்தில் சுற்றி வருகிறது.

அந்தக் கடிதத்தில் இருப்பதாவது...
‘மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு... கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மீண்டும் 14 நாட்களுக்கு லாக் டவுன் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. கரோனா பாதிப்பு மூன்றாவது நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக மத்திய -மாநில அரசுகள் தீவிரமாக பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழக அரசின் செயல்பாடுகளும் மிகச்சிறப்பாக உள்ளது என்று மத்திய அரசு பாராட்டியிருக்கிறது. அதனை நாங்களும் நேரிடையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இத்தகைய சூழ்நிலையில் அரசியல் காரணத்திற் காகவோ, அல்லது நிர்வாக காரணத்திற்காகவோ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்கிவைத்திருப்பது சரிதானா என்கிற மிகப்பெரிய கேள்வி விராலிமலை தொகுதி மக்களான எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்கள் மத்தியிலும் இக்கேள்வி எழுந்துள்ளது என்பது உண்மை.
காங் தலைவர் அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோரெல்லாம் கேட்கிறார்கள் என்பதைக்கூட விட்டுவிடுங்கள். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனுபவம் மிக்க சுகாதாரத்துறை அமைச்சரை ஒதுக்கி வைத்திருப்பது சரியானதாக இருக்குமா என்று மருத்துவத்துறையினரே கேட்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக சுகாதாரத்துறையில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் விஜயபாஸ்கர்தான் எடுத்தார். அதை நீங்கள் அங்கீகரித்துள்ளீர்கள். இவ்வளவு ஏன், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா முதல் குட்கா விவகாரம்வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதும் அவர்தான். அமைச்சரவையில் இருக்கிறார் என்பதற்காக அவருக்கு யாரும் உதவியதாக தெரியவில்லை. அவரைப்பிடித்தார், இவரைப்பிடித்தார் என யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், முதல்வராகிய உங்களுக்கு என்ன நடந்தது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.

இப்படிப்பட்ட எந்த விவகாரத்திலும், எந்த இடத்திலும் யாரையும் அவர் காட்டிக்கொடுக்கவில்லை. தனக்கு யாரும் உதவவில்லை என்பதற்காக அவர் கோபித்துக் கொண்டதுமில்லை. அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி தமிழக அரசை தர்மசங்கடத்தில் தள்ளாமல் வெளியே வந்தாரா இல்லையா? இத்தனை சிக்கல்களையும் சமாளித்தவரை ஏற்றுக்கொண்டுதானே அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்று அழகுபார்த்தீர்கள். இத்தகைய சூழ்நிலையில் திடீரென கடந்த 10 நாட்களாக எங்கள் அமைச்சரை ஒதுக்கிவிட்டீர்கள்.

அவரை ஒதுக்க இது சரியான நேரமா என்பதை தயவுசெய்து சிந்திக்க வேண்டுகிறேன்.சுகாதாரத்துறையில் உள்ள தடுமாற்றங்கள் என்னென்ன என்பது எனக்கு தெரியாது. வெளியில் நடப்பதை நாங்கள் நேரடியாக பார்க்கிறோம். கரோனா குறித்த செய்தியாளர் சந்திப்பை அமைச்சருக்கு பிறகு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஜ் நடத்தினார். என்ன காரணத்தினாலோ திடீரென அவர் அமைதியாய் அருகில் அமர்ந்திருக்க இப்போது தலைமைச் செயலாளர் சண்முகம் நடத்தி வருகிறார். ஆனால், இரண்டுபேரின் சந்திப்பும் விஜயபாஸ்கரின் சந்திப்பு போல இல்லை என்கின்றனர் சென்னை பத்திரிகையாளர்கள்.

இதற்கு உதாரணம், ரேபிட் கிட் விவகாரம். சில நாட்களுக்கு முன் செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஜ், ரேபிட் கிட் மிகவும் அவசியம். அது வந்துவிட்டால் ஒரேநேரத்தில் லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யமுடியும். ரிசல்ட் அரை மணிநேரத்தில் தெரிந்துவிடும். இன்று இரவு ஐம்பதாயிரம் ரேபிட் கிட் வந்துவிடும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளரோ ரேபிட் கிட் சோதனை சாதாரணமானதுதான், பிசிஆர் சோதனைதான் சரியானது என்று கூறி சமாளித்தார். ரேபிட் கிட்டும் வரவில்லை.

ஏன் இந்த தடுமாற்றம்?
எங்கள் அமைச்சர் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், என்ன பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு டாக்டர் விஜயபாஸ்கரின் அனுபவத்தையும், சுறுசுறுப்பையும் இந்தநேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கரோனாவை விரட்டுங்கள், வாழ்த்துக்கள்’ இப்படி முடிகிறது அந்தக் கடிதம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்