கரோனா தொற்று; அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்போம்: இஸ்லாமியக் கூட்டமைப்பு உறுதி

By செய்திப்பிரிவு

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை அடையாளப்படுத்துவதும், சிகிச்சையின்போது கைதியைப் போல சில இடங்களில் நடத்தப்படுவதையும், சோதனை முடிவை தெரிவிக்காமல் இழுத்தடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என இஸ்லாமியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை பெரியமேட்டில் உள்ள தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத் தலைமையகத்தில் நேற்று நடந்தது.

கே.எம்.காதர் முகைதீன், எம்.எச்.ஜவாஹிருல்லா, உமர் பாரூக், வி.எஸ்.அன்வர் பாதுஷா உலவி, கே.எம்.இல்யாஸ் ரியாஜி நெல்லை அமீன் மற்றும் ஜமாலுதீன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* நமது வாழ்நாளில் இதுவரை காணாத கொடிய கரோனா நோய்க் கிருமி முழு உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

* தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளி வாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

* கரோனா அவசர நிலையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

* கரோனா எதிரொலியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மருத்துவர்கள் உள்பட அனைத்து அரசுத் துறையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கரோனா தொடர்பாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக வீடுதோறும் நடைபெறும் ஆய்வுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வலியுறுத்துகிறது.

* கரோனா நோய், அதன் பரவல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியவை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அனைத்தும் நம்பகத்தன்மை உடையது அல்ல. எனவே கேட்டதையெல்லாம் ஆய்வில்லாமல் பரப்புவது ஒரு முஸ்லிமின் பண்பு அல்ல. இந்த அடிப்படையில் சமூக வலைதளங்களில் வருபவை அனைத்தையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

* கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளவர்கள் தாங்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பாமல் கீழே கையொப்பமிட்டுள்ள அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற 7373736085 என்ற கரோனா அவசர உதவி மையத்தின் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த எண்ணில் பதிவு செய்யும் தகவல்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இடர்பாடுகள் நீக்கப்பட வழி வகை காண்பதற்கு இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

* டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டனர். இதில் கரோனா தொற்று உள்ளது என்று பரிசோதனையில் அறியப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களை மருத்துவப் பரிசோதனைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் உட்படுத்தி வருகின்றனர்.

* இச்சூழலில் பல்வேறு மாவட்டங்களில் அம்மாவட்ட ஆட்சியர்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மூலம் கண்ணியமாக எவ்வித பதற்றத்திற்கும் வழிவகுக்காமல் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் பணியினை திறம்பட மேற்கொண்டு வருகின்றனர். இதே சிறப்பான வழிமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

* கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சில அரசு மருத்துவமனைகளில் சரியான குடிநீர் வசதி செய்துக் கொடுக்கப்படவில்லை என்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது என்றும் கைதிகளை போல் எங்களை அடைத்து வைத்துள்ளனர் என்றும் புகார்கள் வந்துள்ளதை வருத்தத்துடன் பதிவுச் செய்கிறோம்.

மேலும் மருத்துவப் பரிசோதனையில் கரோவினால் பாதிக்கப்பட்டவர் என்று அறியப்பட்டவர்களும் பாதிக்கப்படாத வர்களும் ஒரே இடத்தில் சமூக இடைவெளியின்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களிடையே பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு மிகப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

* சில மருத்துவமனைகளில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் புகார் வந்துள்ளது. இந்த மோசமான அவலநிலை போர்க்கால அடிப்படையில் நீக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

* கரோனா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பரிசோதனை அறிக்கை அளிக்கப்படுவதில்லை. இது அவர்களுக்கு மிகப் பெரும் மன உளைச்சலை அளித்து வருகின்றது.

இதே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் கசிய விடப்படுகிறது. இது மருத்துவ அறத்திற்கும் மனிதநேயத்திற்கும் முரணானதாகும். அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்தக் குறையை நீக்கும் வகையில் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு பகுதியில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர் உள்ளார் என்ற தகவல் அங்குள்ள உள்ளாட்சி மற்றும் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தேவையற்ற பதற்றத்தை அப்பகுதியில் ஏற்படுத்துகின்றது. இந்த நிலையை நீக்குவதற்கும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

* சமூக வலைதளங்களில் பரப்பப்படும் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரங்கள் மீது புகாரின் அடிப்படையில் சிலர் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே நேரத்தில் சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்வோர் மீது மேலும் தீவிரமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு இஸ்லாமியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்