தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமைக்கான சட்ட திருத்த மசோதா அறிமுகம்- அமைச்சர் டி.ஜெயக்குமார் பேரவையில் தாக்கல் செய்தார்

By செய்திப்பிரிவு

தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கும் விதிகளில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார். இதற்கான நோக்கக்காரண விளக்க உரையில் கூறியதாவது:

கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழி கல்வி பயின்றவர்களை அரசுப்பணிகளில் பணிநியமனம் செய்தல் சட்டமானது, தமிழ் வழிக்கற்றல் மூலம் நேரடி நியமனத்துக்காக வகுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த சட்டத்தில் 2(டி) பிரிவானது, ‘தமிழ் வழியில் கல்வி பயின்ற நபர்’ என்பது, அரசுப்பணிகளில் உள்ள எந்த ஒரு பணி நியமனத்துக்கும் பொருந்தும் விதிகள், அல்லது ஒழுங்குமுறை விதிகள் அல்லது உத்தரவுகள்படி நேரடி ஆள்சேர்ப்புக்கு வகுக்கப்பட்ட கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர் என்று பொருள்படும் என்று விளக்குகிறது. இதற்காக இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

குறிப்பாக, 10-ம் வகுப்பு வகுக்கப்பட்ட கல்வித் தகுதியாக இருந்தால், ஒருவர் அந்த வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றிருக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி உயர்ந்த கல்வித் தகுதியாக இருந்தால் 10-ம் வகுப்பு மற்றும் மேல் நிலைக்கல்வியையும் பட்டயப்படிப்பு உயர்ந்த கல்வித் தகுதியாக இருந்தால், 10-ம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஒருவேளை, மேல்நிலைக் கல்விக்குப் பின் பட்டயப்படிப்பு படித்திருந்தால் 10-ம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டயப்படிப்பை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு உயர் கல்வித்தகுதியாக இருந்தால் 10-ம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டப்படிப்பை தமிழ் வழியிலும், பட்டமேற்படிப்பு என்றால் 10-ம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு என அனைத்தும் தமிழ் வழிக்கல்வி மூலம் பயின்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்திலும் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில், ஏற்கெனவே அரசுப்பணியில் உள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெறாதவர்களுக்காக நடத்தப்படும் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச மதிப்பெண்ணை 35 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக திருத்தம் செய்யப்படுகிறது.

மேலும், கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகளுக்கு நிகரான படிப்புகளை எடுத்துக் கொள்வதற்கு உயர் கல்வித்துறை செயலரை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அறிமுகம் செய்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

2 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

50 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்