ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 6 ரக எரிபொருள் மட்டுமே விற்பனை- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையில், பி.எஸ்.6 ரக எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர் சஞ்ஜீவ் சிங் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மிகுந்த கவனம்செலுத்தி வருகிறது. வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளில், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பொருட்களின் அளவை பெருமளவை குறைத்து, காற்று மாசு ஏற்படாத வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதையொட்டி, கடந்த 2017 ஏப்ரல் மாதம் பி.எஸ்.4 (பாரத் ஸ்டேஜ்) ரக எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்தகட்டமாக பி.எஸ்.6 ரக எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கந்தகத்தின் (சல்ஃபர்) அளவு மிக மிக குறைவாக இருக்கும். ஏப்ரல் மாதம் முதல் முற்றிலும் பி.எஸ்.6 ரக எரிபொருள் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.

முன்பு உபயோகப்படுத்தப்பட்ட பி.எஸ்.2 ரக எரிபொருளில் கந்தகத்தின் அளவு 350 பிபிஎம் ஆக இருந்தது. இது பி.எஸ்.4 ரக எரிபொருளில் 50 பிபிஎம்-ஆக குறைக்கப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்படும் பி.எஸ்.6 ரக எரிபொருளில் கந்தகத்தின் அளவு 10 பிபிஎம் மட்டுமே இருக்கும். பி.எஸ்.6 ரக இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதால், சுற்றுச்சூழல் பாதிப்பு வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போதுள்ள பி.எஸ்.4 ரக எரிபொருளை, பி.எஸ்.6 ரக எரிபொருளாக மாற்றுவதற்கான கட்டமைப்புகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலைகளில் மேற்கொண்டுள்ளோம். சென்னையில் ஏற்கெனவே பி.எஸ்.6 ரக எரிபொருள் விற்பனையைத் தொடங்கிவிட்டோம்.

தரச் சான்றிதழ்

எனினும், அதற்கான தரச் சான்றிதழ் அளிக்கவில்லை. ஏப்ரல் மாதத்துக்குள் தரச் சான்றிதழ் அளிக்கப்படுவதுடன், பி.எஸ்.6 ரக எரிபொருள் மட்டுமே விற்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகிவிடும்.

சர்வதேச தரத்திலான பி.எஸ்.6 ரக எரிபொருள் உற்பத்திக்காக இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.35 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளன. நாட்டின் மொத்த எரிபொருள் சந்தையில் 44 சதவீதம் வைத்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டும் ரூ.17 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மூலமாகவே இந்த மாற்றங்களைச் செய்துள்ளோம்.

விலை உயர்வு இருக்காது

பி.எஸ்.6 ரக எரிபொருள் அறிமுகம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவுக்கு உயர்வு இருக்காது. சுமார் ஒரு

சதவீதம் உயர்வு இருக்கலாம். ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள், பெட்ரோல், டீசல் விற்பனையை பெரிய அளவுக்குப் பாதிக்கவில்லை. நடப்பாண்டு இறுதிக்குள் பெட்ரோல், டீசல் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை சமையல் காஸ் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 50 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து, விவசாயிகள் உள்ளிட்ட யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது மொத்த எரிவாயு பயன்பாட்டில், இயற்கை எரிவாயுவின் பங்களிப்பு 6 சதவீதமாக உள்ளது. இதை 15 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. புதிதாக எரிவாயு பகுதிகளை கண்டுபிடிக்கும் திட்டத்துக்கு மட்டும் இந்த அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. பைப்லைன் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டங்களிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐஓசி செயல் இயக்குநர்கள் ஜெயதேவன், அரூப் சின்ஹா, இயக்குநர் குர்மீத் சிங், பொதுமேலாளர் ஆர்.சிதம்பரம் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்