சிஏஏவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: டிடிவி தினகரன் பேட்டி

By செய்திப்பிரிவு

சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றினால் ஆதரிப்பேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்து?

மதச்சார்பற்ற நாடு இது. இந்தியாவில் வாழும் மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். இதில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. மத்திய அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிஏஏ சட்டத்தில் எல்லோருக்கும் குடியுரிமை கிடைக்க மத்திய அரசு செயல்பட வேண்டும். அதேபோன்று என்பிஆர் சட்டத்தில் பெற்றோர் பிறந்த இடம், பிறந்த தேதி இதையெல்லாம் கேட்பதால்தான் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.

இஸ்லாமிய மக்களாக இருக்கட்டும், இந்துக்களாக இருக்கட்டும், யார் மனதில் அச்சம் இருந்தாலும் அதைப் போக்குகின்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவேண்டும்.

பிஹாரில் என்சிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது. உங்கள் கோரிக்கை என்ன?

பிஹாரில்கூட முதல்வர் நிதிஷ் குமார் என்பிஆரை 2010-ல் கொண்டு வந்ததன் அடிப்படையில் அதை அமல்படுத்தவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இங்கும் மக்கள் போராட்டம் நடக்கிறது. இங்குள்ள சில அரசியல் கட்சிகள் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால் அதை எப்படி அரசியலாக்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஏன் என்றால் இந்தப் பிரச்சினையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இனி எந்தக் கலவரமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டப்பேரவையில் ஏற்கெனவே 2010-ல் இருந்த நடைமுறையில் என்பிஆரை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

திமுக என்பிஆர் விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. உங்கள் நிலைப்பாடு என்ன?

திமுக இன்றைக்கு ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும்போது மத்திய அமைச்சரவையில் இருந்தவர்கள் திமுகவினர். அப்போது திருத்தம் கொண்டுவரக் காரணமே என்ஆர்சியை கொண்டுவரத்தான். 2010-ல் என்பிஆரில் காங்கிரஸ் கட்சி திருத்தம் கொண்டுவந்தபோதும் கூட்டணியில் இருந்தது திமுக.

அன்று எதிர்க்கவில்லை. ஆனால் இன்று ஞானோதயம் பெற்று எதிர்க்கிறார்கள். வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் இன்றைக்கு குடியுரிமை பாதுகாப்பு மாநாடு எல்லாம் நடத்தி தேவையற்ற விஷயங்களைப் பேசுகிறார்கள். நான் அதுபோன்று அரசியல் செய்ய விரும்பவில்லை.

இதில் எங்கள் நிலைப்பாடு மத்திய அரசு சிஏஏவை மறுபரிசீலனை செய்து இஸ்லாமியர்களையும் அதில் சேர்த்து, இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவு வந்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் கம்பி எண்ணுவார்கள் என்று ஸ்டாலின் சொல்கிறாரே?

அதாவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழும் நிலை. ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதே முதன்முதலில் ஸ்டாலின் தான். தமிழ்நாடு முழுவதும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்தார்கள். சசிகலாவுக்கு எதிராகக் கிளப்பிவிட்டார்கள். அதைத்தான் தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ்ஸும் கையில் எடுத்தார். திமுக பேசுவது எல்லாமே சாத்தான் வேதம் ஓதும் கதைதான்.

ரஜினியின் நிலைப்பாடு குறித்து?

டெல்லியில் நடந்த அந்தக் கொடுமையான சம்பவம். அதை இந்தியா முழுதும் பரவாமல் தடுக்கவேண்டும். அது மத்திய அரசால் முடியும். ரஜினிகாந்த் அவரது கருத்தைச் சொல்லியிருக்கிறார். தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் நான் கருத்து சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் வந்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

நிச்சயம் ஆதரிப்பேன். மதத்தின் அடிப்படையில் சிஏஏ சட்டம் இருக்கக்கூடாது என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.

தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினால் எப்படி இருக்கும்?

முதலில் பழனிசாமி அரசு கொண்டுவரட்டும். கொண்டுவந்தால் நான் ஆதரவாக வாக்களிப்பேன். கொண்டுவரட்டும். அதன் பிறகு பார்ப்போம். ஏற்கெனவே 7 பேர் விடுதலை, நீட் குறித்த தீர்மானம் என்ன ஆச்சு? இப்போதுகூட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்ட மசோதாவில்கூட நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். ஏற்கெனவே அங்கு செயல்படும் 152 எண்ணெய்க் கிணறுகளின் நிலை என்ன? இப்போது அனுமதி கொடுத்த வேதாந்தா, ஐஓசி திட்டங்கள் அதையெல்லாம் நிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்போது அதனால் பாதிப்பில்லை என்று சட்டம் போடுவது ஏமாற்றம் தரும் விஷயம். நீட் தேர்வில் தீர்மானம் போட்டு அனுப்பி மத்திய அரசு 2 வருடத்திற்கு முன்னரே திருப்பி அனுப்ப, அதை தமிழக அரசு மறைத்துவிட்டது. அதேபோல் தேர்தலுக்காக இதுபோன்ற தீர்மானத்தைக் கொண்டுவரக்கூடாது.

இவ்வாறு டிடிவி தினகரன் பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 mins ago

இந்தியா

10 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்