170 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கண்டறியப்பட்டன

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி யில் 170 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டறியப் பட்டுள்ளன.

திருச்சி-தஞ்சாவூர் தேசியநெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி யில் பயணியர் விடுதியின் சுற்றுச்சுவர் அருகே தமிழ் எண்களுடன் கூடிய 2 மைல் கற்கள் இருப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூண்டியைச் சேர்ந்த சமூகஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலைத் தொடர்ந்து, தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சிஅலுவலர் து.மணிசேகரன் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் திருச்சி, தஞ்சாவூர் இடையே ஆங்கிலேயரால் சாலை மேம்பாடு செய்யப்பட்ட 1849-ம் ஆண்டு தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் நடப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. ஆய்வு குறித்து ஆ.மணிகண்டன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இடங்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது செங்கிப்பட்டியில் மேலும் 2 மைல் கற்கள் கண்டறியப்பட்டுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெறு கிறது.

இதில் ஒரு மைல் கல் செங்கிப்பட்டி பிரதான நெடுஞ்சாலையிலும், மற்றொரு மைல் கல் துவாக்குடிக்கு அருகிலும் நடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஒரு மைல் கல்லில் தஞ்சாவூர் 16 என அரபு எண்ணிலும், ‘யசா’ என தமிழ் எண்ணிலும், தொடர்ச்சியாக திருச்சினாப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) 18 மைல் என்பதை ‘ய௮’ என தமிழ் எண்ணுடனும் குறிக்கப்பட்டுள்ளன.

2-வது மைல் கல்லில் தஞ்சாவூர் 21 என அரபு எண்ணிலும் ‘௨ய௧’ என தமிழ் எண்ணிலும், திருச்சிநாபளி (திருச்சிராப்பள்ளி) 13 என அரபு எண்ணிலும், ‘ய௩’என தமிழ் எண்ணிலும் குறிப்பிப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், திருச்சியில் இருந்து திருவெறும்பூர் வழியாக தஞ்சாவூருக்குச் செல்லும் ஏழாம் எண் சாலை, 1849-ம் ஆண்டு போடப்பட்டது என்றும், இது கப்பிச் சாலையாகவும், பாலத்துடனும் நல்லநிலையில் இருந்ததாக ‘லீவிஸ் மூர்’ என்ற ஆங்கிலேயர் 1878-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதியிட்ட ‘மேனுவல் ஆஃப் தி திருச்சினாப்பொலி டிஸ்டிரிக்ட்’ என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சான்றின் மூலம் மைல் கல் நடப்பட்ட ஆண்டை உறுதிசெய்ய முடிகிறது. மேலும், தமிழ் எண்கள் எந்தக் காலம் வரை பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது என்பதற்கான முக்கியத்துவத்தை அறிய உதவும் குறிப்பிடத்தக்க சான்றாகவும் இது அமைந்துள்ளது.

மேலும், இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மைல் கல்லில் தமிழ், ரோமன் எண்கள் இருந்தன. இதனால், புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ், ரோமன் எண்கள் அலுவலக பயன்பாடுகளில் முதன்மை பெற்றிருந்ததும், தஞ்சை மற்றும் திருச்சி ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் மற்றும் அரபு எண்கள் முன்னிலை பெற்றிருந்ததையும் அறிய முடிகிறது.

100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரோமன் மற்றும் அரபிய எண்கள் வெளிநாட்டவருக்கான எண்களாகவும், மக்கள் பயன்பாட்டில் தமிழ் எண்கள் மட்டுமே இருந்துள்ளதையும் இந்தக் மைல்கற்களின் மூலம் புரிந்து கொள்ளமுடிகிறது.

மேலும், தமிழ் எண்கள் அண்மைக் காலமாகத்தான் மக்களின் பயன்பாட்டில் இருந்து வழக்கொழிந்து போயிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

வலைஞர் பக்கம்

20 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

26 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்