அன்புச்செழியன் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்

By செய்திப்பிரிவு

'பிகில்' பட விவகாரத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், அன்புச்செழியன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனையடுத்து நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில் அன்புச்செழியன் இன்று ஆஜரானார்.

நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் கடந்த 5-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் ரூ.77 கோடி ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறை தரப்பில், “நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரசிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் தரப்பில் கொண்டாடப்பட்டது. ரூ.300 கோடி வசூலானதாகக் கூறப்பட்டது. அதையொட்டி திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர், நடிகர் விஜய், அவரது படத்தின் பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் இரண்டு நாட்கள் இந்தச் சோதனை நடந்தது.

வருமான வரித்துறை சோதனையில் முக்கியமான அம்சம் பைனான்சியர் அன்புச்செழியனிடம் கணக்கில் காட்டாப்படாத ரூ.77 கோடி ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத ரூ.160 கோடிக்கான வருமான வரியை அன்புச்செழியன் கட்டுவதாகத் தெரிவித்ததாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது.

இது தவிர இந்தச் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், காசோலைகள், முன் தேதியிட்ட காசோலைகள் கைப்பற்றப்பட்டன. இந்த முழு சோதனையில் கிடைத்த ஆவணங்கள், சாட்சிகள் அடிப்படையில் மறைக்கப்பட்ட பணம் ரூ.300 கோடியைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

படத் தயாரிப்பாளர், ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர் கல்போத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு அலுவலக வரவு- செலவுக் கணக்குகள் கைப்பற்றப்பட்டன.

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் நேரில் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரது வீட்டில் 2 நாட்கள் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் விஜய், கல்போத்தி அகோரம், அன்புச்செழியன், ஸ்க்ரீன் சீன் நிர்வாகி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி அனைவரும் ஆஜராக சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜய் விசாரணையில் இதுவரை ஆஜராகவில்லை. பின்னொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அன்புச்செழியன் தரப்பில் வழக்கறிஞர், விஜய் தரப்பில் வழக்கறிஞர் மற்றும் ஆடிட்டர் ஆஜரானார்கள்.

வருமான வரித்துறை அலுவலகத்தில் 'பிகில்' படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி கடந்த 12-ம் தேதி ஆஜரானார்.

இந்நிலையில் இதுவரை விசாரணையில் ஆஜராகாமல் இருந்த பைனான்ஸியர், விநியோகஸ்தர் அன்புச்செழியன் இன்று காலை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் 'பிகில்' பட சம்பள விவகாரம், கைப்பற்றப்பட்ட பணம் ரூ.77 கோடி மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.160 கோடி உள்ளிட்ட பல விவகாரங்கள் கேள்வியாக வைக்கப்பட்டு விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 mins ago

தமிழகம்

9 mins ago

இந்தியா

27 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்