மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு; ஒரே அறிவிப்பில் மக்களிடமிருந்து ரூ.46,265 கோடி பறிப்பு: கே.எஸ்.அழகிரி கண்டனம்

By செய்திப்பிரிவு

விலை உயர்வு காரணமாக சாதாரண ஏழை,எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. பொருளாதார சீரழிவு காரணமாக படுபாதாளத்தை நோக்கி மக்களின் வாழ்க்கைத் தரம் போய்க் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தாத பாஜக அரசு மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்துகிறது என கே.எஸ்.அழகிரி கண்டித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரி விதித்து வருமானத்தை பெருக்கிக் கொண்டது. இதன்மூலம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பயன்படுத்திக் கொண்டது. மக்கள் மீது சுமை ஏறுவதைப் பற்றி கவலைப்படாமல் கலால் வரியை உயர்த்தியது.

இந்நிலையில், மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாடு முழுவதும் ரூபாய் 149 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.734-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 147 அதிகரித்து, ரூ.881-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து விலகிய 16 மே 2014 அன்று மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.414 ஆக இருந்தது இன்று ரூ.881 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்தரை ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 100 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, மானியத்துடன் வழங்கப்படுகிற சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.414 ஆக இருந்தது, இன்று ரூ.567 ஆக விற்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.153 உயர்த்தப்பட்டு, ஓராண்டுக்கு வழங்கப்படுகிற 12 சிலிண்டர்களுக்கு மொத்தம் ரூ.2,000 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 25.21 கோடி நுகர்வோர்கள் ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கி வருகிறார்கள். இந்த அடிப்படையில் ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு ரூ.153 என்ற அடிப்படையில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஓர் ஆண்டுக்கு வருகிற வருமானம் ரூ.46,256 கோடி. ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் மத்திய அரசு இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து கொடூரமாக பறித்திருக்கிறது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. மே 2014 இல் 1 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.17 ஆக இருந்தது, இன்று ரூ.74 ஆக விற்கப்படுகிறது. அதுபோல, தக்காளி ரூ.16-லிருந்து ரூ.35, உருளைக்கிழங்கின் விலை ரூ.15 லிருந்து ரூ.28, சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.135-க்கு விற்கப்படுகிறது.

இத்தகைய விலை உயர்வு காரணமாக சாதாரண ஏழை,எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது குறித்து மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பொருளாதார சீரழிவு காரணமாக படுபாதாளத்தை நோக்கி மக்களின் வாழ்க்கைத் தரம் போய்க் கொண்டிருப்பதையே இந்த விலை உயர்வு படம்பிடித்து காட்டுகிறது.

இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு கைத்திறன் இல்லாத பாஜக அரசு மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதற்கான வழிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. எனவே, நாட்டு மக்களை வதைக்கிற வகையில் உயர்த்தப்பட்டுள்ள மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உடனடியாக மத்திய பாஜக அரசு குறைக்க வேண்டும்.

விலைக் குறைப்பை உடனடியாக மத்திய அரசு அறிவிக்கவில்லையெனில், கடுமையான போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

45 mins ago

வாழ்வியல்

36 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்