அம்ரூத் திட்ட முதல்கட்ட நகர தேர்வில் கரூர் இடம்பெற வாய்ப்பில்லை

By க.ராதாகிருஷ்ணன்

நாடு முழுவதும் 500 நகரங்களை மேம்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் நகர நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைக்கும் அம்ரூத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 1 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்கள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 33 நகரங்களில் அம்ரூத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

1 லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகை மற்றும் மாவட்ட தலைநகரம் என்ற அடிப்படையில் அம்ரூத் திட்டத்தில் கரூர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அதற்கான தீர்மானம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் நகரத்துக்கு தேவையான திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அம்ரூத் திட்டத்தின் முதல் கட்ட நகர தேர்வில் கரூர் இடம்பெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கரூர் நகராட்சி மக்கள்தொகை 70,000. அதேயாண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்ட பின் நகராட்சியின் மக்கள்தொகை 2.14 லட்சமாக உயர்ந்தது. இருந்தபோதும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது அப்போதைய கரூர் நகராட்சி பகுதியில் மட்டும் மக்கள்தொகை 70,000 இருந்ததால் அதனடிப்படையில் அம்ரூத் திட்டத்தின் முதல் கட்டத்தில் கரூர் தேர்வு செய்யப்படுவது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கரூர் நகராட்சி ஆணையர் (பொ) புண்ணியமூர்த்தியிடம் கேட்டபோது, “அம்ரூத் திட்டத்தின் முதல் கட்ட நகர தேர்வில் கரூர் நகராட்சி உள்ளிட்ட பல நகராட்சிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. என்ன காரணம் என தெரியவில்லை. மக்கள்தொகை காரணமாக இருக்கலாம். 2-ம் கட்டத்தில் கரூர் நகராட்சி தேர்வு செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல், தஞ்சாவூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டபோதே கரூர் நகராட்சியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கரூர் நகராட்சி அப்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருந்தால் தற்போது ஸ்மார்ட் சிட்டி நகரத்தில் தேர்வாகி இருக்கும். ஸ்மார்ட் சிட்டி வாய்ப்பை இழந்த நிலையில், அம்ரூத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் ஆறுதல் அளித்த நிலையில் தற்போது அதற்கும் வாய்ப்பில்லை என்ற தகவல் சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் தகவல் உள்ளது. கரூர் நகராட்சியுடன் அருகேயுள்ள உள்ளாட்சி பகுதிகளை ஒன்றிணைத்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என்ற முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பதுதான் அந்த தகவல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்