குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்: தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 250% அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜன.25) வெளியிட்ட அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலை சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசியை சுற்றிலும் டாஸ்மாக் கடைகள் அதிகம் இருப்பதும், குடிபோதைக்கு பலரும் அடிமையாகி வருவதும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதும் குற்றங்கள் நடைபெறுவதற்கும், அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாக உ ள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் மீதான குற்றங்கள் 250 சதவிகிதம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் வெளிவந்துள்ள தேசிய குற்றப்பதிவு ஆணைய அறிக்கை தமிழ்நாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் கடந்த ஐந்தாண்டுகளில் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இத்தகைய குற்ற எண்ணிக்கை தேசிய சராசரியை விட இரட்டிப்பாக அதிகரித்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ள ஐந்து மாநிலங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. மேலும், அதிகமான பெண் குழந்தைகள் வணிக ரீதியாகக் கடத்தப்படுவதும் நடந்து கொண்டுள்ளது.

மேற்கண்ட விபரங்கள் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றன. அதிகரித்து வரும் போதைப்பழக்கம், வலைதளங்களில் ஆபாச படங்கள் ஒளிபரப்பு, போன்றவற்றால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்ட போதிலும் நிலைமையில் மாற்றமில்லை என்பது வேதனைக்குரியது. மறுபக்கம், இத்தகைய கொடுமைகளைத் தடுப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததும், பாலியல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதும் இதற்கான காரணிகளாக இருக்கின்றன.

கொலை செய்யப்பட்ட குழந்தை இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க வெளியே சென்ற போது தான் இக்கொடுமை நடந்துள்ளது. அப்பகுதியில் ஒரே ஒரு கழிப்பறை கூட இல்லை. தூய்மை பாரதம் என்பதெல்லாம் கண்துடைப்பு தான். இவற்றையெல்லாம் செய்யாத அரசும் குற்றவாளியே.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கொங்கலாபுரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ள குழந்தையின் பெற்றோர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு, உண்மை குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்கு மற்றும் தண்ணீர் வசதியோடு கூடிய கழிப்பறைகள் போதுமான எண்ணிக்கையில் கட்டப்பட வேண்டும்.

அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திட சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அடுத்த நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இதுகுறித்து விவாதிக்க சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும்.

மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு இயக்கத்தை அனைத்து சமூக அக்கறையுள்ள அமைப்புகளும் மேற்கொள்ள முன்வர வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்