தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்த வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டை வாழ்த்தியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மாநாட்டின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

“வரும் பிப்ரவரி 5 ஆம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது.

திராவிடக் கட்டிடக்கலை என உலக வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் தமிழரின் பண்பாட்டுச் சின்னமாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பேரதியசமாக விளங்குகிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

அந்தப் பெருங்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராசராசசோழன் சிலைக்கே கோயில் வளாகத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது, கடந்த கால வரலாறு. அதனால்தான், கோயில் அருகிலேயே அதனைக் கட்டிய மாமன்னனின் சிலையை மக்கள் காணும் வண்ணம் நிறுவி, பூங்காவையும் அமைத்தார் கலைஞர்.

வரலாறு நெடுகிலும் தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழர் பண்பாட்டின் வழிபாட்டுமுறைகள் சிதைக்கப்பட்டு, பிற பண்பாடுகளின் ஆதிக்கம் நுழைந்திருப்பதை உணர முடியும். அதை மாற்றி, தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு, தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என வலியுறுத்துகிறது.

கோயில்களில் தமிழ் வழிபாட்டையும் சமூக நீதியையும் நிலைநாட்டுவது என்பது தொடர்ச்சியான பண்பாட்டுப் போராட்டமாகும். தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில், தொன்மைமிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களான பல கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. "கும்பாபிஷேகம்" என்ற வடசொல்லை நீக்கி, "குடமுழுக்கு' என்ற தமிழ்ச் சொல்லைப் பரவலாக்கியதும் திமுக அரசுதான்.

தமிழில் அர்ச்சனை என்பதில் தொடங்கி, அனைத்து சமுதாயத் தமிழர்களும் அர்ச்சகர்களாவதற்கான சட்டம் வரை திருக்கோயில்களில் தமிழர் வழிபாட்டு முறையை நிலைநாட்டுவதில் தலைவர் கலைஞரின் அரசு உறுதியான முயற்சிகளை மேற்கொண்டதையும், அந்த முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் திமுக அரசு நடத்திய சட்டப் போராட்டங்களையும் நாடறியும்.

தொல்தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்டிடும் முயற்சிக்கான போராட்டங்கள் காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. அந்த வகையில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்த வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

இந்த மாநாட்டின் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என விரும்புகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

49 mins ago

ஜோதிடம்

59 mins ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்