தமிழக மின்திட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தும் முடிவைக் கைவிடுக: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழக மின்திட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (ஜன.16) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மின்சார வாரியம் மீள முடியாத கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதன் மூலம் செயல்படுத்தப்படும் மின்திட்டங்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை நிறுத்தப் போவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கெனவே ஏராளமான நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், மத்திய அரசின் புதிய நிலைப்பாடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் எழுதியுள்ள கடிதத்தில் இதுகுறித்து விளக்கியிருக்கிறார். தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கிய மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் ஏராளமான தொகையை நிலுவை வைத்திருப்பதாகவும், தமிழக அரசுத்துறைகள் மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தைச் செலுத்தாமல் உள்ளன என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், அடுத்த 3 மாதங்களில் இக்குறைகள் களையப்படாவிட்டால் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்தும் மின்திட்டங்களுக்கு மத்திய அரசின் மின்நிதி நிறுவனங்கள் வழங்கி வரும் கடன் உதவி நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மின்திட்டங்கள் அனைத்திற்கும் ஊரக மின்மயமாக்கல் கழகம், எரிசக்தி நிதி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள்தான் கடன் வழங்கி வருகின்றன. பொதுத்துறை வங்கிகளை விட மின் நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால், அதற்காக பல நிபந்தனைகளையும் விதிக்கின்றன.

மின்வாரியங்கள் லாபத்தில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் விதிக்கப்படும் நிபந்தனைகளில், மின்சாரக் கொள்முதலுக்கான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த வேண்டும்; விநியோகிக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணம், மானியம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்க வேண்டும் என்பன மிகவும் முக்கியமானவை.

ஆனால், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்த மின்சாரத்திற்காக மின் வாரியம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்தாமல் வைத்திருக்கும் நிலுவை ரூ.11 ஆயிரத்து 728 கோடி ஆகும். அதேநேரத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மின்வாரியத்திற்கு ரூ.1,500 கோடிக்கும் கூடுதலான தொகையை நிலுவை வைத்துள்ளன. இவற்றையெல்லாம் காட்டித்தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்திட்டங்களுக்கு கடனுதவி வழங்க மத்திய அரசு மறுக்கிறது.

மின்சார வாரியம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து மத்திய அரசு தெரிவித்திருக்கும் விவரங்கள் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதன் பின்னணியை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை நேற்றைய நிலவரப்படி 13 ஆயிரத்து 215 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்தும் மின் திட்டங்களின் திறன் 7,158 மெகாவாட் என்றாலும், அவற்றின் மூலம் நேற்று உற்பத்தி செய்யப்பட்டது வெறும் 2,974 மெகாவாட் மட்டும்தான். மீதமுள்ள தேவையில் 4,881 மெகாவாட் மத்திய மின் திட்டங்கள் மூலமாகவும், 5,360 மெகாவாட் மின்சாரம் தனியார் மின்திட்டங்களில் இருந்தும் வாங்கப்படுகிறது.

தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்கப்படும் மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது, அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது போன்ற சமூக நலத் திட்டங்களால், மாநில அரசின் மானியத்தைப் பெற்ற பிறகும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.8,000 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது.

2007-13 காலத்தில் தமிழகத்தில் மிகக்கடுமையான மின்தட்டுப்பாடு நிலவியது. அந்தக் காலத்தில் மிக அதிக அளவிலான மின்சாரம் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டதுதான் இந்த இழப்புக்குக் காரணமாகும். 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு மின்சார வாரியத்தின் இழப்பு குறைந்து வந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக இழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்தக் கடன் கடந்த 2018 ஆம் நிதியாண்டின் முடிவில் ஒரு லட்சத்து 1,294 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. அதனால் தான் தமிழ்நாடு மின்வாரியத்தால் மின்கொள்முதலுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்த முடியவில்லை.

தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்துவதன் மூலம் தான் இழப்பைத் தவிர்க்க முடியும். அதற்கு அதிக எண்ணிக்கையில் மின்திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டும் தான் இது சாத்தியமாகும். இன்றைய நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் 5,700 மெகாவாட் மின்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மேலும் 12 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள மின்திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.

இவற்றையெல்லாம் விரைந்து செயல்படுத்தினால்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் லாபத்தில் இயங்கும். அதற்கு மத்திய மின் நிதி நிறுவனங்களின் உதவி தேவை. மத்திய மின்நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்திவிட்டால், மின்திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்குச் சென்று விடும். அதன்பின் நிலைமையைச் சீரமைக்க இலவச மின்சாரத்தை நிறுத்துவது, மானியத்தை ரத்து செய்வது, கட்டணத்தை உயர்த்துவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இது மக்கள் நலனுக்கு ஏற்றதல்ல.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, தமிழக மின்திட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தும் முடிவைக் கைவிடுவதுடன், மின்சார வாரிய நிதிநிலையை மேம்படுத்துவதற்கான உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 min ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

42 mins ago

வாழ்வியல்

33 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்