இராக் பதற்றம்: புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

இராக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (ஜன.4) வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.78.39-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.72.28-க்கும் விற்கப்படுகின்றன. கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் ஒரு நாள் கூட குறையாமல், தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

2019-ம் ஆண்டின் முதல் பாதியில் குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது பாதியில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த கிறித்துமஸ் நாளில் தொடங்கி இன்று வரையிலும் சரியாமல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த திசம்பர் 25-ம் தேதி 77.58 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களில் லிட்டருக்கு 81 காசுகள் அதிகரித்து ரூ.78.39 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை இதே காலத்தில் லிட்டருக்கு ரூ.1.46 உயர்ந்து இப்போது ரூ.72.28 ஆக உள்ளது.

2019-ம் ஆண்டில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தான் பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைவாக இருந்தது. அப்போது ரூ.74.51 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று வரை ரூ.3.88 உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை கடந்த 3 மாதங்களில் ரூ.3.44 உயர்ந்துள்ளது. இன்றைய பெட்ரோல் விலை கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாத கடைசி வார நிலவரத்திற்குப் பிந்தைய 15 மாதங்களில் மிக அதிக விலையாகும். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்துறைகளும், விவசாயமும் மிக மோசமான பின்னடைவுகளைச் சந்திப்பது உறுதி!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையான உயர்வைச் சந்தித்தன. அதன்பின் விலை குறையாத நிலையிலேயே அடுத்த சுற்று விலையேற்றம் தொடங்கியுள்ளது.

இராக் தலைநகர் பாக்தாத் மீது அமெரிக்கப் படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தின. பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் போர்ப்படைத் தலைவர் காசிம் சுலைமாணி உள்ளிட்ட 7 ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மீண்டும் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்ற அச்சம் காரணமாகவே, பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகின்றன.

இதே நிலை நீடித்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் பெட்ரோல், டீசல் விலை உச்சகட்டத்தை எட்டின. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.79.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஈரானில் பதற்றம் தணிக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் பழைய உச்சத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொடக்கூடும்.

உலக அளவில் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தால், எரிபொருட்களின் தேவைகள் குறைந்து அவற்றின் விலைகளும் குறைய வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி ஆகும். ஆனால், இந்தியாவில் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது. இது குறித்து ஆய்வு செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.19.98 வீதமும், டீசலுக்கு ரூ.15.83 வீதமும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மீதான கலால் வரி 2017 அக்டோபரில் லிட்டருக்கு 2 ரூபாயும், 2018 அக்டோபரில் லிட்டருக்கு 1.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டது.

இந்தியப் பொருளாதாரம் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்வது நன்மை பயக்காது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

2 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்