திருப்பத்தூரில் மனு அளித்த ஒரு மணிநேரத்தில் மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை; ஆணையை வழங்கினார் வட்டாட்சியர்

By ந. சரவணன்

திருப்பத்தூரில் மனு அளித்த ஒரு மணிநேரத்தில் மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகையை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (80). இவரது மனைவி இந்திராணி (75). முனுசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஆண் வாரிசு கிடையாது. 2 மகள்கள் இருந்தனர். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் வசித்து வந்த 2 மகள்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆதரவற்ற நிலையில் இந்திராணி சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வந்தார். கிடைக்கும் வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டி வந்த இந்திராணி, தமிழக அரசு சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையைக் கேட்டு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக மனு அளித்து வந்ததாகத் தெரிகிறது.

மனுவைப் பெற்று வந்த வருவாய்த் துறையினர், விசாரணை நடத்தி மாதாந்திர உதவித்தொகை வழங்குவதாகக் கூறி வந்தனர். ஆனால், நாட்கள் கடந்தது தான் மிச்சம். 6 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் அளித்து வந்த இந்திராணி, இன்று (ஜன.1) காலை திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணனை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

மனுவைப் பெற்ற வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், இந்திராணிக்கு ஒரு மணிநேரத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை வழங்கினார். இந்த ஆணையை, தனி வட்டாட்சியர் மகாலட்சுமி நேரில் சென்று வழங்கினார்.

இதைக் கண்ட மூதாட்டி இந்திராணி நெகிழ்ச்சியடைந்து, 6 ஆண்டுகளாக மனு அளித்து வந்தேன். தற்போதுதான் பலன் கிடைத்தது என வட்டாட்சியருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இது குறித்து வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் கூறுகையில், "வயதான, ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் முதியோர் உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையைப் பெற தேவையான ஆவணங்களை இணைத்து பயனாளிகள் மனு அளிக்க வேண்டும். மாடப்பள்ளியைச் சேர்ந்த மூதாட்டி இந்திராணியின் மனுவைப் பார்த்தபோது அவர் ஆதரவற்ற நிலையில் வறுமையில் கஷ்டப்படுவது தெரியவந்தது.

உடனே, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்துக்கு வரச்சொல்லி விண்ணப்பத்தில் நானே கையெழுத்து பெற்று, அதை ஆன்லைனின் பதிவேற்றம் செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் இந்திராணிக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவு வந்தது.

இந்திராணி தேவையான ஆவணங்களை இணைத்திருந்ததால் ஒரு மணிநேரத்தில் அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இது போலத் தேவையான ஆவணங்களை இணைத்து ஆதரவற்ற முதியோர்கள் மனு அளித்தால் அவர்களுக்கும் நிச்சயம் உதவித்தொகை விரைவாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்