நீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை; உச்ச நீதிமன்ற உத்தரவை சற்றும் மதிக்காத தேர்தல் அறிவிப்பு: ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 6.12.2019 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்திற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினையும், வார்டு மறுவரையறையினையும், சட்ட விதிமுறைப்படி செய்து, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“2017-ம் ஆண்டு வார்டு மறுவரையறை ஆணைய விதிகள்”, “1994-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகள்”, “1995-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து (இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி அடிப்படையிலான இட ஒதுக்கீடு) விதி - 6” உள்ளிட்ட எதையும் பின்பற்றாமல், மீண்டும் ஒரு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அதிமுக அரசின் 'கைப்பிள்ளையாக' மாநிலத் தேர்தல் ஆணையர் மாறியிருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள வெட்கக்கேடு, துடைக்க முடியாத இழுக்கு.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மாநிலத் தேர்தல் ஆணையமும் படிக்கவில்லை, அந்தத் தீர்ப்பில் “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்துவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது பற்றி தமிழக அரசும் கவனம் செலுத்தவில்லை.

திமுக சார்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள உத்தரவு உள்ளிட்ட சட்ட விதிகள் அனைத்தையும் விளக்கி 7.12.2019 அன்று கொடுத்த மனுவினையும் மாநிலத் தேர்தல் ஆணையர் படிக்கவில்லை. 'சட்டத்தைப் படுகொலை' செய்யும் ஒரு தேர்தல் ஆணையர் , முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் சொல் கேட்டு நடக்கும் 'அதிமுக கிளைச் செயலாளர்' போல் மாறியிருப்பது வேதனையளிக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பழைய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்த மாநிலத் தேர்தல் ஆணையர், புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு, அரசியல் கட்சிகளை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தாமல், 'நேர்மையான, சுதந்திரமான' தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறார்.

“வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நிறைவுபெறாமல் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை உருவாக்கும் அரசியல் சட்டப்படியான கட்டளையை அரசு நிறைவேற்ற முடியாது” (State Cannot fulfill the Constitutional Mandate) என்று உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியும், மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் அடாவடியாக தனது பொறுப்பைத் தட்டிக்கழித்திருப்பது அரசியல் சட்டத்திற்கே அச்சுறுத்தல் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தையே மதிக்காத, இன்னும் சொல்வதென்றால் அவமதிக்கும் மன்னிக்க முடியாத குற்றமாகும். அரசியல் சட்டத்திற்கும், பஞ்சாயத்து சட்டங்களுக்கும் புறம்பான ஒரு உள்ளாட்சித் தேர்தலை, 'யாராவது சென்று தடை வாங்கிக் கொள்ளட்டும்' என்ற ஒரே உள்நோக்கத்துடன் ஜனநாயகத்திற்கு விரோதமாக வெளியிடுவதற்கு மாநிலத்தில் ஒரு தேர்தல் ஆணையரோ, ஒரு தலைமைச் செயலாளரோ நிச்சயமாக தேவையில்லை என்ற எண்ணம், சட்டத்தின் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கும் திமுக - உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் அதிமுக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கைகோத்து செய்துள்ள ஜனநாயகப் படுகொலையை நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

ஆகவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 'வார்டு மறுவரையறை' மற்றும் 'பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு' ஆகியவற்றை செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்