திருவள்ளுவர், ராமானுஜன் போன்ற அறிஞர்களை உலகுக்கு வழங்கிய புனிதமான மண்ணில் பதவியேற்றது பெருமை: வரவேற்பு விழாவில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை

தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் கணிதமேதை ராமானுஜன் வரை ஏராளமான மகான்கள், அறிஞர்கள், ஞானிகளை உலகுக்கு தந்த புனிதமான இந்த மண்ணில் பதவியேற்றது பெருமை தருகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.சாஹி தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சாஹி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் அவருக்கு முறைப்படி வரவேற்பு விழா நடத்தப்பட்டது. விழாவில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசியதாவது:தமிழகம் கலாச்சாரப் பெருமை வாய்ந்தது. தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் கணிதமேதை ராமானுஜன் வரை ஏராளமான மகான்கள், அறிஞர்கள், ஞானிகளை உலகுக்கு தந்த புனிதமான இந்த மண்ணில் தலைமை நீதிபதியாக பதவியேற்றது பெருமை தருகிறது.

மக்களுக்கு பயன் அளிக்கும் சிறப்பான தீர்ப்புகளை வழங்க வழக்கறிஞர்கள், நீதித் துறை என அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். அதேபோல, நாட்டின் வளர்ச்சிக்கு நீதித் துறையின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது.

வரலாற்றுச் சிறப்பு, பாரம்பரியம் கொண்ட இந்த உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நான் மேற்கொள்ள இருக்கும் பணிகளுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் வாழ்க்கைக் குறிப்புகள், பாட்னா உயர் நீதிமன்றத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக அவர் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள், அரசியலமைப்புச் சட்டத்தில் அவரது தனித்துவம் பற்றி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பேசினார்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறும்போது, ‘‘நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைக்கும் வகையில் பார் கவுன்சில் மற்றும் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் நீதித் துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள்’’ என்று உறுதி அளித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (எம்எச்ஏஏ) துணைத் தலைவர் ஆர்.சுதா வரவேற்றுப் பேசும்போது, ‘‘உயர் நீதிமன்ற மதுரை கிளைபோல சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் காந்தி சிலை நிறுவ வேண்டும். வழக்கறிஞர்கள் - போலீஸார் இடையே மோதலை தவிர்க்கும் வகையில் நீதித் துறை, வழக்கறிஞர்கள் சங்கம், அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து அடிக்கடி கலந்தாய்வு நடத்த வேண்டும்.

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது பெண் வழக்கறிஞர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு பல அடுக்கு தானியங்கி கார் பார்க்கிங் வசதி, பொதுமக்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றார்.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏஆர்எல் சுந்தரேசன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேஷன் தலைவர் எல்.செங்குட்டுவன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் பி.எச்.அரவிந்த்பாண்டியன், எஸ்.ஆர்.ராஜகோபால், எஸ்டிஎஸ் மூர்த்தி, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

37 வழக்குகள்

தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற ஏ.பி.சாஹி, முதல் நாளிலேயே 37 வழக்குகளை விசாரித்தார். பொதுநல வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பு, அதன் அடிப்படை மூலத்தை ஆராய்வது அவசியம் என்று மனுதாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 min ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்