சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே பெரியதாக அமைகிறது ரூ.396 கோடியில் பிரம்மாண்ட கால்நடை பூங்கா: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை

ஆசியாவிலேயே மிக பிரம்மாண்ட மாக உலகத் தரத்தில் நவீன கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, முதல்வர் பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது:சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமாக 900 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு உலகத் தரத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிதாக பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ரூ.396 கோடியில் நிறுவப்படும்.

இந்த பூங்கா 3 பிரிவுகளாக அமையும். முதல் பிரிவில் நவீனவசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையிலான கறவை மாட்டுப் பண்ணை அமைக்கப்படும். இதுதவிர, காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய உள்நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்பு, இனப்பெருக்கப் பண்ணை அமையும். செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கோழி இனங்களின் பிரிவுகளும் அமையும். ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகிய நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்க பிரிவுகளை உள்ளடக்கிய கால்நடைப் பண்ணை உருவாக்கப்படும்.

சந்தைப்படுத்த வசதிபூங்காவின்

2-வது பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை பாதுகாத்து பதப்படுத்துதல், அவற்றில் இருந்து உப பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வசதி உருவாக்கப்படும். 3-வது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி, தொழில் முனைவோர் பயிலரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய வளாகம் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் தலைவாசலில் நவீன கால்நடைப் பூங்கா அமைக்க, கால்நடைத் துறை செயலர் கோபால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பூங்காவை அமைப்பதற்கான அடிப்படை பணிகளை இக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் முதல்வர் பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ கால்நடைப் பண்ணையை பார் வையிட்டார்.

அமெரிக்க தொழில்நுட்பம்

பயணம் முடிந்து சென்னை திரும்பிய முதல்வர் இதுகுறித்து கூறும்போது, ‘‘அமெரிக்காவின் பஃபல்லோ பண்ணையில் கால்நடை வளர்ப்பு மற்றும் அங்குள்ளதொழில்நுட்பங்களைக் கேட்டறிந்தோம். அங்கு ஒரு பசு, ஒருநாளைக்கு 70 லிட்டர் பால் கொடுப்பதாக கூறினர். அந்த பால் பண்ணையில் ஒரே இடத்தில் 3,000 பசுக்களை வளர்க்கின்றனர். அதில்60 சதவீத பசுக்களிடம் இருந்து பால் கறக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 1.20 லட்சம் லிட்டர்பால் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அதில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கன்றுகள் வளர்க்கும் முறையையும் பார்வையிட்டோம். சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படும் பிரம்மாண்ட கால்நடைப் பூங்காவில் இந்த தொழில்நுட்ப வசதிகளை புகுத்துவதற்காக அங்கு சென்று பார்வையிட்டோம்’’ என்றார்.

இந்நிலையில், கால்நடைப் பூங்கா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனி சாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், துறை செயலாளர்கள் எஸ்.கிருஷ்ணன் (நிதி), கோபால் (கால்நடை), தீரஜ்குமார் (எரிசக்தி), ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், திட்டம் தொடர்பான வரைபடத்தை வெளியிட்ட கால்நடைத் துறை செயலாளர் கோபால், ஒவ்வொரு பிரிவும் எந்தெந்த இடத்தில் அமைய உள்ளது என்பது குறித்து விளக்கினார். இதையடுத்து, திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

ரூ.82 கோடியில் கல்வி நிறுவனம்

தலைவாசல் கால்நடை பூங்கா வளாகத்தில் ரூ.82 கோடியில் புதிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிக்கான உயர் கல்வி நிறுவனம் வரும் கல்வியாண்டில் தொடங்க நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2020-21 ஆண்டில் 40 இடங்கள், அடுத்த ஆண்டில் 40 இடங்கள் என மொத்தம் 80 கால்நடை மருத்துவ இடங்கள் அதிகரிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

7 mins ago

வலைஞர் பக்கம்

11 mins ago

சினிமா

16 mins ago

சினிமா

21 mins ago

இந்தியா

29 mins ago

க்ரைம்

26 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்