போராடும் மருத்துவர்களை மக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்காதீர்கள் : அரசுக்கு சீமான் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை

போராடும் அரசு மருத்துவர்களை மக்களுக்கு எதிரானவர்கள்போல் சித்தரிக்க அரசு முயல்வது வேதனையான ஒன்று. அமைச்சரும், முதல்வரும் உடனடியாகத் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என சீமான் வேண்டுகோள் வைத்தார்.

4 முக்கியக் கோரிக்கைகளை வைத்து அரசு மருத்துவர்கள் கடந்த 7 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆகஸ்ட் மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்று 6 வார காலத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக அவகாசம் கேட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது அலட்சியம் காட்டியதால் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராடும் மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்வோம் எனத் தெரிவித்து மருத்துவர்களுக்கு எதிராக பிரேக் இன் சர்வீஸ் மற்றும் போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்கள் சட்ட மேற்படிப்பு மாணவர்கள் தகுதி மதிப்பெண் தரப்படாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று காலை 500 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மதியத்திற்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் பதவி இழப்பு என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். இதையெல்லாம் மீறி 6 நாட்களைக் கடந்து 7-வது நாளாகப் போராட்டம் வலுவாக நடந்து வருகிறது.

போராடும் மருத்துவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருக்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்கள் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு சீமான் அளித்த பேட்டி:

''4 நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசை பலமுறை வலியுறுத்தி 4-வது முறையாக அதே கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை பட்டினிப் போராட்டம் என மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த முறை போராட்டம் நடத்தியபோது கோரிக்கைகளை ஏற்று 6 வார காலம் அவகாசம் கேட்டார் அமைச்சர். அவர் கொடுத்த 6 வார கால அவகாசம் முடிந்த பின்னர் மறுபடியும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராடும் மருத்துவர்களை மக்களுக்கு எதிரானவர்களாகக் காட்ட முயல்வது சரியல்ல. இந்த அரசுக்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் போராடும் மருத்துவர்களை அழைத்து அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி உடனடியாக இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் உடனடியாகத் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு''.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மதியம் 2 மணிக்குள் போராட்டத்தைக் கைவிடாவிட்டால் கடும் நடவடிக்கை என எச்சரித்துள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், ''இதெல்லாம் அதிகாரத்தை வைத்து மிரட்டுவது. இந்த அதிகாரங்கள் யாருக்கும் நிரந்தரமில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் படித்த மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலை வந்துவிட்டது. இதை அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவே இப்படியென்றால் சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், அடித்தட்டு மக்கள் வைக்கும் கோரிக்கைக்கும் போராட்டத்துக்கும் என்ன மதிப்பிருக்கும். இதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்