வாய் வீரம் காதைக் கிழிக்கிறது; வாக்குகளோ தினமும் குறைகிறது: சீமான் மீது சுப.வீ விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை

வாய்வீரம் காதைக் கிழிக்கிறது, வாக்குகளோ தினமும் குறைகிறது என, சீமான் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சுப.வீரபாண்டியன் இன்று (அக்.26) தன்னுடைய முகநூல் பக்கத்தில், "கைபேசிகள் எல்லாம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்களின் பொதுமேடைகளில், தலைவர்களை எதிர்பார்த்து மணிக்கணக்காய்க் காத்திருக்கும் மக்களிடம், "வந்துகொண்டே இருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார், இதோ வந்துவிட்டார்" என்று அறிவிப்பார்கள். அப்படித்தான் இப்போது, "வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்து கொண்டே இருக்கிறார், இதோ வளர்ந்துவிட்டார்" என்று ஒருவரைப் பற்றிய முற்றிலும் செயற்கையான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த ஒருவர் - சீமான்!

கனவுகளும் கற்பனைகளும் கூடாதவை என்று சொல்ல முடியாது. ஆனாலும், ஓர் அரசியல் பயணத்திற்கு அவை மட்டுமே போதுமானவை அல்ல.

தான் முதல்வரானதும் என்னென்ன செய்வேன் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும், சீமான் சொல்லத் தவறுவதே இல்லை.

ஆனால் யதார்த்தத்தில் என்ன நடந்தது என்றால், நாங்குநேரி இடைத்தேர்தலில், ஹரி நாடார் என்னும் ஒரு மனிதர் இவர்கள் அனைவரின் கனவுகளையும் நொறுக்கிப்போட்டு விட்டார். பல லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி, மேடைகள் போட்டு, சுவரொட்டிகள் ஒட்டி, கேட்பவர்களின் காதுகளில் ரத்தம் வடிகிற மாதிரிச் சத்தம் போட்டுப் பேசி, எதிர்காலத் திட்டங்களை எல்லாம் அறிவித்து, இவ்வளவு அலப்பறைகளையும் இவர்கள் செய்து கொண்டிருக்க, சத்தமே போடாமல் தொகுதிக்கு வந்து, இவர்களை விடக் கூடுதலான வாக்குகளை அவர் வாங்கிவிட்டார்.

உண்மையிலேயே நாம் தமிழர் கட்சிக்கான வாக்குகள் கூடிக் கொண்டே போகின்றனவா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவை கூடிக்கொண்டே போகவில்லை. கூடிக் குறைந்துள்ளது என்பதே உண்மை. இந்த உண்மையைப் பல்வேறு தேர்தல் முடிவுகள் தரும் புள்ளி விவரங்களைக் கொண்டே நாம் பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் நுழைவு காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி அதிமுகவை ஆதரித்தும் தொடங்கியது. அப்போது அவர்கள் நேரடியாகப் போட்டியிடவில்லை. பிறகு மும்பை சென்று, புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனை ஆதரிக்கிறோம் என்ற சாக்கில், பாஜக வேட்பாளரான அவரையும், மோடியையும் ஆதரித்துப் பேசித் தொடர்ந்தது.

2016 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அவர்கள் 231 தொகுதிகளில் போட்டியிட்டனர். அந்தப் பொதுத்தேர்தலில் அவர்கள் வாங்கிய மொத்த வாக்குகள் 4,58,007. அதாவது 1.06%

2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 3,860 வாக்குகள் பெற்றனர். மொத்த வாக்குகளில் அது 2.18%

2019 மக்களவை தேர்தலில், 37 தொகுதிகளில் போட்டியிட்டு அவர்கள் பெற்ற வாக்குகள் 16,45,185. வளர்ச்சிதான், 3.88% வாக்குகளைப் பெற்றுவிட்டனர். அவ்வளவுதான், தலைகால் புரியவில்லை. நாங்கள்தான் அடுத்த ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்றார்கள். ஆனால் அதற்குப் பின் தளர்ச்சி தொடங்கிவிட்டது.

வேலூர் இடைத்தேர்தலில், தினகரன், கமல் ஆகியோரின் கட்சிகள் போட்டியிடாத சூழலிலும், அவர்கள் வாக்குகளையும் சேர்த்து இவர்கள் பெறவில்லை. மாறாக, இருந்த வாக்குகளையும் இழந்தனர். அதில் அவர்கள் பெற்ற வாக்குகள் 2.6% மட்டுமே.

இப்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அந்த வாக்கு சதவீதம் மேலும் சரிந்துள்ளது. இரண்டு தொகுதிகளிலுமாகச் சேர்த்து, 1.85% விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர்.

தேர்தல்களில் வெற்றி தோல்விகள் இயல்பானவை. வாக்குகள் கூடும், குறையும். எதுவும் நிரந்தரமில்லை. அடுத்த தேர்தலிலேயே வாக்குகள் கூடலாம். தேர்தலில் பெறும் வாக்குகளை வைத்து மட்டும் ஒரு கட்சியை மதிப்பிட முடியாது.

ஆனால் கட்டுத்தொகையைக் கூடப் பெறாத சூழலில், எந்தக் கட்சியும் இவ்வளவு கூச்சல் போட்டதில்லை.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தன, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 15 வாக்குகள் பெற்றிருந்தால் கூட, 7500 வாக்குகள் கிடைத்திருக்கும். ஆனால், இவர்களோ 7000 வாக்குகளுக்கும் குறைவாகவே இரண்டு தொகுதிகளிலும் சேர்த்துப் பெற்றுள்ளனர். அதாவது, ஒரு வாக்குச்சாவடிக்கு 15 வாக்குகள் வீதம் கூட வாக்குகளைப் பெற இயலாத நிலையில்தான் அக்கட்சி உள்ளது என்பது புரிகிறது.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுவது, அவர்களைக் குறைத்துப் பேசுவதற்காக அன்று. வளர்வதற்கு முன்பே இவ்வளவு ஆணவம் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்குத்தான். மற்றவர்களுக்கெல்லாம் எங்கள் மீது பொறாமை என்கின்றனர். ஒரு வாக்குச்சாவடியில் 15 வாக்குகளைக் கூடப் பெற இயலாதவர்கள் மீது யாரேனும் பொறாமை கொள்வார்களா?

மேடையில் பேசும்போது அனைவரையும் தரக்குறைவாகப் பேசுவது, ஒருமையில் பேசுவது இவற்றை எல்லாம் குறைத்துக் கொள்வது அக்கட்சிக்கு நல்லது என்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான், இவ்வளவும் எழுத வேண்டியுள்ளது.

'நாங்கள்தான் கொன்று புதைத்தோம்' என்று சீமான் அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசினார். உண்மைதான், தமிழகத்தின் மேடை நாகரிகத்தை அவர்தான் கொன்று புதைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வந்துவிட்டது போலவும், முதல்வராகி விட்டது போலவும் கருதிக்கொண்டு அவர் பேசிய கூட்டங்கள் எத்தனை! "எதிர்க்கருத்து உள்ளவர்களைப் பச்சைப் பனைநாரால் சத்தமின்றி அடித்துச் சதையைப் பிய்த்துவிடும் இடி அமீன் கனவுகள்தான் எத்தனை!

சீமானுக்கு அன்புடன் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டியுள்ளது. திராவிட இயக்கத்தை அழிப்பது, முதல்வராகி ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் இருக்கட்டும். முதலில், ஒரு தொகுதியிலாவது கட்டுத்தொகையை வாங்கிவிட முடியுமா என்று பாருங்கள்," என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்