முற்றிலும் தடை செய்யப்படுமா பிளாஸ்டிக் பயன்பாடு?- கோவையில் விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

எளிதில் மக்காத தன்மைகொண்ட பிளாஸ்டிக் பைகள் இந்த பூமிக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானவை. நமது புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. நமது அன்றாட வாழ்வில் பயன்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மிகப் பெரும் பிரச்சினையாக மாறின. காய்கறி, பால், துணிக்கடை, மருந்துக்கடை, மின்னணு சாதனங்கள், மளிகை, டீக் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என பிளாஸ்டிக்கின் பயன்பாடு இல்லாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது.
இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் மாற்றுப் பொருட்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. எனினும், 100 சதவீதம் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தடுக்கப்பட்டுவிட்டதா என்பது கேள்விக்குறியே?

இந்த நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில், துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமி, நிர்வாகிகள் மருதாசலம், குழந்தைவேலு, ஈஸ்வரமூர்த்தி, சிவக்குமார், ஜீவானந்தம், பிரவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் பைகள், உணவுப் பொருட்கள் அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை கயிற்றில் கட்டி எடுத்துக்கொண்டு வந்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “பிளாஸ்டிக் பைகளை தடை செய்த தமிழக அரசு, இது தொடர்பாக ஆய்வு நடத்தவும், கட்டுப்படுத்தவும், அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. எனினும், கோவை மாவட்டத்தில் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யவில்லை.

பல்வேறு திண்பண்டங்கள், ஷாம்பு, தண்ணீர் பாட்டில், எண்ணெய், பாக்கு, சுண்ணாம்பு, அலங்காரப் பொருட்கள் என ஏராளமான பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில்தான் அடைத்து, விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் உற்பத்தியும் தடுத்துநிறுத்தப்படவில்லை. ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகள் இவற்றை சேகரித்தாலும், ஒரு இடத்தில் கொட்டிவைக்கின்றன. பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பை மலைபோல தேங்கியுள்ளது. சில இடங்களில் இவற்றுக்கு தீ வைத்து எரிப்பதால், சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. காற்று மாசு காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டம் உயராததற்கு பிளாஸ்டிக் கழிவுகளும் முக்கிய காரணமாகும். மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகள், நிலங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை சாப்பிடுவதால், அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அவை இறக்கின்றன. எனவே, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்வதுடன், உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைக் கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு, பிளாஸ்டிக் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்