முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

By செய்திப்பிரிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன்(64) இன்று காலை காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஞ.செந்தூர் பாண்டியன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (11.7.2015) மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன்.

அன்புச் சகோதரர் செந்தூர் பாண்டியன் கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த பற்று கொண்ட ஒரு தூய தொண்டர். கழகப் பணியாற்றுவதில் வல்லவர். ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு திறம்பட செயல்பட்டு வந்தவர். அவர் கடுமையான உழைப்பாளி. தன் வாழ்க்கையை கழகப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர்.

செந்தூர் பாண்டியன், தென்காசி தொகுதி துணை அமைப்பாளர், செங்கோட்டை நகரக் கழக அவைத் தலைவர், நகரக் கழகச் செயலாளர், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முதலான கழகப் பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றியவர்.

செங்கோட்டை நகர மன்ற துணைத் தலைவர், செங்கோட்டை பால் விநியோக கூட்டுறவு சங்கத் தலைவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர், தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகத்தின் தலைவர் என பல்வேறு அரசுப் பதவிகளை வகித்த செந்தூர் பாண்டியன் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராகவும், சுற்றுலாத் துறை அமைச்சராகவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புச் சகோதரர் செந்தூர் பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

செந்தூர் பாண்டியனின் இழப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்