சூர்யாவின் ‘காப்பான்’ படத்துக்கு எதிரான வழக்கு: மீண்டும் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை

நடிகர் சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தனது கதையைப் பயன்படுத்தியுள்ளதாக காதாசிரியர் ஒருவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் , ஆர்யா உள்ளிட்டோர் நடித்த 'காப்பான்' திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை, 'காப்பான்' படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில் , “கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய என்னுடைய கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்திருந்தேன். எதிர்காலத்தில் இந்தக் கதையைப் படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக தெரிவித்திருந்த நிலையில் எனது கதையைப் பயன்படுத்தி 'காப்பான்' படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டும், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனம் லைகா, மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் தரப்பில், பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கு தொடர்ந்த நபரை தனக்குத் தெரியாது என்றும், லைகா நிறுவனத் தரப்பில் விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுக்களை ஏற்று 'காப்பான்' படத்திற்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

'காப்பான்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இது சம்பந்தமான மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையில் ஆஜரான, சார்லஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிவாசகம் தனது வாதத்தில், “ஒரு கதை தொடர்பான விவகாரத்தில் இரண்டு தரப்பு கதையையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 'காப்பான்' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு ஜான் சார்லஸின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்