5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: நாளை முற்றுகைப் போராட்டம்; வேல்முருகன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பைக் கண்டித்து, நாளை கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகைடும் போராட்டம் நடைபெறும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செப்.16) வெளியிட்ட அறிக்கையில், "5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. உடனடியாக இதை ஏற்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஓர் அறிவிப்பே வெளியிட்டு விட்டார். அதாவது, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்; ஆனால் இதில் மூன்று ஆண்டுகள் விதிவிலக்கு..

அமைச்சரின் அறிவிப்பில் ஒருவித சூசகம் தெரிவதை மறைக்க முடியாது, மறுக்கவும் முடியாது. அவர் என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்று, மத்திய பாஜக அரசின் சுற்றறிக்கை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்க வேண்டும்; அல்லது நிறைவேற்றப்படாது என்றிருக்க வேண்டும். ஆனால் மிகவும் சாதுர்யமாக தமிழக மக்களை ஏமாற்ற முனைந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சுற்றறிக்கைகளையெல்லாம் முற்போக்கான தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பது தெரிந்தும், பாஜகவுக்குப் பயந்து நடுங்கி பசப்பியிருக்கிறார். அதனால்தான் மூன்று ஆண்டுகள் விதிவிலக்கு என்கிறார். பொதுத்தேர்வு நடக்குமாம்; ஆனால் முடிவுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு. பொறுப்புள்ள ஓர் அமைச்சரின் பேச்சா இது?

அமைச்சருக்கு வேண்டுமானால் பாஜகவின் பாதுகாப்பு தேவைப்படலாம். ஆனால் புத்திகூர்மையும் மனத்தூய்மையும் மிக்க தமிழக மக்களுக்கு அப்படியில்லை. அவர்கள் பாஜகவுக்கு என்ன, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கே பாடம் எடுக்கக்கூடியவர்கள். அமைச்சரின் சரணாகதி அறிவிப்பு ஏன் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?

கொஞ்ச நாட்களுக்கு முன்தான் மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் காலத்திற்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத படுபிற்போக்கான புராண கால குருகுலக் கல்வி முறையை இந்திய மக்களின் தலையில் கட்ட வேண்டி வெளியிட்டது. அதில் இந்த 5 ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பதும் இடம்பெறுகிறது.

அதன் முன்னோட்டமாகத்தான் இப்போது 5 ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கு சுற்றறிக்கை ஆனுப்பியிருக்கிறது. அதாவது யானை வரும் பின்னே, மணி ஓசை வந்தது முன்னே; சரிதானே?

அரசியலில் அதிகாரம் பெறுவது மக்களுக்கு உழைப்பதற்குத்தான். ஆனால் இதற்கு மாறாக மக்களையும் எதிரியிடம் பணயம் வைத்து தங்களைக் தற்காத்துக் கொள்வதோடு பலாபலன்களையும் அறுவடை செய்பவர்கள் பதவிகளிலும் அமர்ந்துவிடும் காலம் இது. அப்படியான ஒருவர்தானா தானும் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே தைரியமாக அவர் "5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது" என்று திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். எங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் இதையே எதிர்பர்க்கிறோம்.

மேற்க்கண்ட கோரிக்கையை முன்வைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நாளை 17-09-2019 செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும், பொதுமக்களும், பெற்றோர்களும் பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்," என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்