எழுவர் விடுதலை: 29 ஆண்டுகளாக சிறைக் கொட்டடி; தமிழக ஆளுநர் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை

எழுவர் விடுதலை விவகாரத்தில், ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், நளினி ஆகியோர் 28 ஆண்டுகளைக் கடந்து சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், நளினி, தன் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பரோலில் உள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என, உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்யும்படி, ஆளுநருக்கு கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததற்கு, எழுவர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் காரணமாக இருக்கும் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அந்த வழக்கும் கடந்த மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்து இன்றுடன் (செப்.9) ஓராண்டு நிறைவடைகிறது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எத்தனை சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டாலும் கூட, இந்த விஷயத்தில் ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல.

29 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களை இனியும் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல். தமிழக ஆளுநர் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்