சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர முனைப்பான நடவடிக்கைகள் தேவை: மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

சென்னை,

சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' 'பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அவசரம் அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சட்டம் போன்ற மிகப்பெரிய பிழைகளில் இருந்து இந்தியப் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்துள்ளதில் பிரதிபலிக்கிறது' என்று பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள கருத்து, இந்தியப் பொருளாதாரம் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தொடர்ச்சியானதும், மிகத் தவறானதுமான முடிவுகளால் அதலபாதாளத்தை நோக்கிப் படு வேகமாக பயணித்துக் கொண்டிருப்பதை, அகில உலகமும் உற்று நோக்கும்படி வெளிப்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கிறது என்பதை இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம், முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் ஆகியோர் மட்டுமின்றி, தற்போதைய நிதி அயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், ஏன், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் எல்லாம் எடுத்துரைத்தும் பிரதமர் நரேந்திர மோடியோ, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

வரலாறு காணாத வகையில், வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாற்பது ஆண்டு காலத்தில் நாடு கண்டிராத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிவிட்டது. கிராமப்புற பொருளாதாரம் அடியோடு நலிவடைந்து கீழ்நிலைக்குப் போய்விட்டது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறுதொழில் செய்வோர், வருமானம் இல்லாமல் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிராம வருமானம், கைக்கு எட்டாத தொலைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்சமயம் 5 சதவீதமாக குறைந்து 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, அதன் வளர்ச்சிநிலை குலைந்துப் போய் நிற்கிறது.

ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 3.5 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 'வரி வசூல் பயங்கரவாதம்' ஒருபுறம் தலைவிரித்தாட, ரிசர்வ் வங்கியிடமிருந்துப் பெற்ற 1.76 லட்சம் கோடி ரூபாயை எப்படிச் செலவழிப்பது என்பதற்கு உருப்படியான செயல்திட்டம் ஏதுமின்றி மத்திய அரசு தடுமாறுகிறது என்று வெளிவரும் தகவல், 'பற்றாக்குறை' என்பது நிர்வாகத்தையும் பற்றிக் கொண்டு விட்ட பதற்றமான காட்சியை அரங்கேற்றியுள்ளது.

நாட்டு மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்து, உரிய ஆலோசனைகளைப் பெற்று, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பாஜக அரசின் கவனமும் முன்னுரிமைகளும் வேறு வகையாக இருப்பது கவலையளிக்கிறது.

ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பிளவு மனப்பான்மையை உருவாக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, சமூத நீதியை சீர்குலைப்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு குழி பறிப்பது போன்ற செயல்திட்டங்களுக்கு மட்டும் மத்திய பாஜக அரசு முன்னுரிமை கொடுப்பது வேதனையளிக்கிறது.

அரசியல் சட்டம் அங்கீகாரம் செய்யாதவற்றை அவசரமாகச் செய்திடத் துடிக்கும் மத்திய அரசு, அறிவுசார்ந்த பொருளாதார அறிஞர்களின் ஆலோசனைகள்படி நடப்பதற்குத் தயாராக இல்லை. பொருளாதார வல்லுநர்கள் விடுக்கும் எச்சரிக்கைகளை பொருட்படுத்த முன்வரவில்லை. ஏதோ பத்திரிகை பேட்டிகள், விளம்பரங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை மட்டும் முன்னிறுத்தி பொருளாதாரப் பின்னடைவுகளை மக்களின் கண்களில் படாமல் மறைத்து விட முடியும் என்று மத்தியில் உள்ள பாஜக அரசு மனப்பால் குடிப்பது, 'இமயமலையை இலைச் சோற்றுக்குள்' மறைத்து விடச் செய்யும் முயற்சி!

எதிர்க்கட்சிகளை பழி வாங்குவது, எந்த மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பது, எந்த மாநிலத்தில் உள்ள ஊழல் ஆட்சியை அடிமைச் சேவகம் கருதி, தொடர அனுமதிப்பது, எந்த கட்சியிலிருந்து எம்எல்ஏ, எம்.பி.க்களை அச்சுறுத்திப் பிரித்து பாஜகவில் சேர்ப்பது போன்றவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்திட்டங்களாக நிச்சயம் இருக்க முடியாது. அப்படி இருக்கும் என்று நம்புவது நிச்சயமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் எண்ணவோட்டமாகவும் இருக்க முடியாது.

ஆகவே, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கூறியிருப்பதுபோல் 'அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை' மூட்டை கட்டி மூலையில் வீசியெறிந்துவிட்டு, பொருளாதாரப் பின்னடைவைச் சீர்செய்து தூக்கி நிறுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அவசர கதியில் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர வைக்கவும், இரண்டாவது முறையாக வாக்களித்த மக்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாதுகாக்கவும் தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மிக முக்கியமான கடமை பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கிறது என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எத்தகையை சோதனைகளையும் சமாளித்து சிலிர்த்து எழும் வல்லமை இந்தியப் பொருளாதாரத்திற்கு உண்டு என்பதை உணர்ந்து, உரிய வகையில் பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை, மேலும் தாமதம் செய்யாமல் எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்