தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு : ராமதாஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா முழுவதும் மத்திய அரசு நிதியில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 82 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ரூ. 24,375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் 2021-22 காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 82 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பாட்டுக்கு வரும் என்பதால் அடுத்த 3 ஆண்டுகளில் மொத்தமாக 15,700 மருத்துவக் கல்வி இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.

இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்பையும், மருத்துவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க இந்த திட்டம் பெருமளவில் உதவும். ஆனால், மத்திய அரசின் இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு தான் மகிழ்ச்சியான பதில் கிடைக்கவில்லை.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தில் அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகளில் 39 கல்லூரிகள் ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. மீதமுள்ள 19 கல்லூரிகள் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளன. அடுத்தக்கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 கல்லூரிகளில் 18 கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இவற்றில் ஒரு கல்லூரி கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும். இந்தத் திட்டமே நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது தான் என்பதால், அத்தகைய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்படலாம்.

பின்தங்கிய பகுதிகளில் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை மிகவும் நியாயமானது தான். ஆனால், அதற்காக வரிகள் மூலம் வருவாயை அள்ளித் தரும் தமிழகம் போன்ற மாநிலங்களை இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் புறக்கணிப்பது நியாயமல்ல. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்றாலும் கூட, தமிழகத்திற்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை கணக்கில் சேர்க்காமல் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவை தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது தான் பாமகவின் நோக்கம் ஆகும்.

அதன்படி, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்பதால், இந்த மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இதை தமிழக அரசால் மட்டும் செய்ய முடியாது என்பதால், மத்திய அரசும் அதன் பங்குக்கு உதவிகளை செய்திருக்க வேண்டும்.

மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள அனைத்து தகுதிகளும் தமிழக மாவட்டங்களுக்கு உண்டு. அதுமட்டுமின்றி, இத்தகைய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 101 முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் கூட மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு முன்வராததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

மற்றொருபுறம், தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தை அமைக்க மதுரை மாநகரம் ஓராண்டுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் 8 மாதங்களாகியும் எய்ம்ஸ் அமைக்க இன்னும் நிதி ஒதுக்கப்படாததால் அத்திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுவும் தமிழக மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக மக்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 75 புதிய மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகளைத் தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 min ago

சினிமா

6 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்