ஆந்திர தடுப்பணைகளால் கனமழை பெய்தும் பாலாற்றில் தண்ணீர் வரவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை

கனமழை பெய்தும் ஆந்திர அரசு கட்டிய தடுப்பணைகளால் பாலாற்றில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு சட்டவிரோதமாக தடுப்பணைகளைக் கட்டியதால் கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் கனமழை பெய்த நிலையிலும் தமிழகத்திற்குத் தண்ணீரே வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

கர்நாடகாவில் உற்பத்தியாகி, ஆந்திராவில் 36 கிலோமீட்டர் மட்டுமே பயணித்து, தமிழகத்தில் 222 கிலோமீட்டர் தூரம் ஓடும் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றாக பாலாறு திகழ்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 4.20 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பாலாற்றுத் தண்ணீரை தான் நம்பி இருக்கிறார்கள்.

பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுப்பதற்காக புதிய தடுப்பணைகளைக் கட்டுவதற்கு ஆந்திர அரசு முயற்சித்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதனை கடுமையாக எதிர்த்தார். தடுப்பணை பணிகளை நிறுத்தவிடுத்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாததால், உச்ச நீதிமன்றத்தை நாடி சட்டப்படியான தீர்வினைப் பெறுவதற்கான முயற்சிகளும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகப்படுத்துவது, புதிய தடுப்பணைகளைக் கட்டுவது என ஆந்திர அரசு முழுவீச்சில் செயல்பட்டது. எனினும் பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்திவரும் முதல்வர் பழனிசாமி, போதிய அக்கறை காட்டாததன் விளைவே தற்போது அங்கே கனமழை பெய்தும் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் வந்து சேராத நிலை உருவாகியுள்ளது.

இதனால் ஏற்பட்டிருக்கிற, ஏற்படபோகிற எதிர்கால பாதிப்புகளையும் முழுபுள்ளி விவரங்களுடன் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்து, பாலாற்றில் நடைபெறும் தடுப்பணை சார்ந்த அனைத்து பணிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் பாலாற்று நீர்ப்பகிர்வு குறித்து 1892 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தையும், தடுப்பணை பணிகளைத் தமிழகத்தின் அனுமதி இன்றி மேற்கொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காத ஆந்திர அரசிடம் இழப்பீடு கேட்டு தனி வழக்கையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் தொடர வேண்டும்.

36 கிலோ மீட்டர் தூரத்தில் 29 தடுப்பணைகளை ஆந்திரா கட்டிவிட்டதால், பாலாற்றில் இனி சுத்தமாக தண்ணீர் வராதநிலை உருவாகி இருக்கிறது. எனவே மத்திய அரசின் உதவியோடு பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பித்து தமிழகத்திற்கு பருவம் தோறும் பாலாற்றில் விட வேண்டிய தண்ணீரின் அளவை நிர்ணயித்து புது ஒப்பந்தம் போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்", என, டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்