தமிழ்நாட்டில் மனித உரிமை ஆர்வலர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழ்நாட்டின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கரூர் மாவட்டம் - குளித்தலை அருகே, முதலைப்பட்டி கிராமத்தில் சுமார் 198.45 ஏக்கர் குளம் மற்றும் நீர்நிலை கொண்ட அரசு நிலம் உள்ளது. இதில் 50 ஏக்கர் தவிர, மற்ற பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டுபோனது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியபோது, 50 பேர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று 2018 அக்டோபர் 24 இல் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனை மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கவனத்துக்கு வழக்குத் தொடுத்த வீரமலை மற்றும் நல்லதம்பி இருவரும் எடுத்துச் சென்றனர். இதனை அடுத்து உயர் நீதிமன்றம், 2019 மார்ச் 8 இல், சமூக விரோதக் கும்பல் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கரூர் மாவட்ட ஆட்சியரும், குளித்தலை வட்டாட்சியரும் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனால் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருந்த சமூக விரோதிகள் வீரமலை அவரது மகன் நல்லதம்பி இருவர் மீதும் கடும் கோபம் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 29 ஆம் தேதி, வீரமலை, நல்லதம்பி இருவரும் ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைப் பாதுகாக்கப் போராடிய 70 வயது நிரம்பிய இயற்கை ஆர்வலர் வீரமலையும், அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 2016 ஆகஸ்டு முதல் 2019 ஜூலை வரை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, மது, சாதி வன்மம் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வந்த மனித உரிமை ஆர்வலர்கள் 38 பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக எவிடன்ஸ் அமைப்பு தெரிவித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசு, ஜனநாயக முறையில் போராடி வரும் மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவிவிடுவதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டம், விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிரான போராட்டம் ஆகியவையே சான்று.

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் புகழூர் விஸ்வநாதனை நள்ளிரவில் அடித்து, உதைத்துக் கைது செய்து, முகிலன் வழக்கில் அவரையும் சேர்த்து சிறை வைத்துள்ளது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் தொடர்ந்து தமிழக அரசின் அடக்குமுறைக்கு உள்ளாவது தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. இதனால், ஊக்கம் பெற்று இருக்கின்ற சமூக விரோதிகளும், மணல் கொள்ளையர்களும் மனித உரிமை ஆர்வலர்களைப் படுகொலை செய்யும் போக்கு சர்வ சாதாரணமாக நடந்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

எனவே தமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும், நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடி வரும் சமூகப் போராளி திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

முதலைப்பட்டியில் வீரமலை, நல்லதம்பி ஆகியோரைப் படுகொலை செய்த குற்றவாளிகள் எவராக இருந்தாலும் உடனடியாகக் கைது செய்து, கூண்டில் நிறுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழகத்தில் தொடர அனுமதிக்கக் கூடாது", என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

10 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்