முக்கொம்பு புதிய அணை கட்டுமானப் பணியில் அலட்சியம்; கடலுக்குச் செல்லும் காவிரி நீர்: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை

முக்கொம்பு புதிய அணை கட்டுமானப் பணியில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதால், காவிரி நீர் வீணாகக் கடலுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பெரும் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. இன்றைய காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.65 லட்சம் கனஅடியாக உயர்ந்து உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 67 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் 15 அடி அதிகரித்து, 82 அடியாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும்.

இந்நிலையில், பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், காவிரி பாசன மாவட்டங்களுக்கு முழுமையாகப் பயன்படாமல், கடலில் போய் வீணாகக் கலந்துவிடும் நிலை கவலை தருகிறது. ஏனெனில், திருச்சி மாவட்டம் - முக்கொம்பு மேல் அணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் ஏழு மதகுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

மேட்டூரிலிருந்து அகண்ட காவிரியாக வரும் காவிரி ஆறு, திருச்சி மாவட்டம், முக்கொம்பு பகுதியில் காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. காவிரியில் அதிக அளவில் வரும் தண்ணீர், காவிரி ஆற்றில் முழுமையாகச் செல்ல முடியாது என்பதால், முக்கொம்புப் பகுதியிலிந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.

முக்கொம்பு மேல் அணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய நீர் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்த்தர் தாமஸ் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு, 630 மீட்டர் நீளம், 45 மதகுகளுடன் முக்கொம்பு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மதகுகள் உடைந்ததால் புதிய அணை கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இதற்காக ரூபாய் 387.60 கோடி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை கடந்த 2018 டிசம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்டது.

முக்கொம்பில் 55 கதவு அணைகளுடன் புதிய அணை கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த ஓராண்டு காலமாக புதிய அணை பணிகள் துரிதமாக நடைபெறாததால், அணை கட்டுமானம் முதற்கட்டப் பணியோடு நின்றுவிட்டது. இந்தப் புதிய அணையிலிருந்து 2 லட்சத்து 83 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும். இதனால் தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக அரசின் மெத்தனப் போக்கால் தற்போது, காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் முழுவதும் விழலுக்கு இறைத்த நீராகக் கடலில் சென்று கலந்துவிடும். கடந்த ஓராண்டு காலமாக முக்கொம்பு புதிய அணைப் பணிகளை கண்காணித்துத் துரிதப்படுத்தாமல், அலட்சியப்படுத்திய தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது மேட்டூரிலிந்து திறந்துவிடும் நீர் வீணாகக் கடலில் சென்று கலக்காமல், காவிரி டெல்டா சாகுபடிக்குப் பயன்படும் வகையில் தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்", என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்